பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி பாரதீய கிசான் சங்கத்தினர் நூதன போராட்டம்

கோவில்பட்டியில், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பாரதீய கிசான் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-06-14 20:30 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டியில், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பாரதீய கிசான் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகள்

தமிழக அரசு ஒரு லிட்டர் பசுவின் பாலுக்கு ரூ.40, எருமை பாலுக்கு ரூ.50 என்று கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். பாக்கெட் பால் விற்பனையை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். பாக்கெட் பாலில் கலப்படம் செய்யப்பட்டது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பொதுமக்கள் நேரடியாக பால் வாங்க வேண்டும். நாட்டு பசு மாடுகளை பாதுகாக்க வேண்டும். பசுவதை தடை சட்டத்தை தொடர வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

நூதன போராட்டம்

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, பாரதீய கிசான் சங்கம் சார்பில், கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நேற்று காலையில் பொதுமக்களுக்கு இலவசமாக பசும்பால் வழங்கும் நூதன போராட்டம் நடந்தது. பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவசமாக பசும்பால் வினியோகித்தனர். போராட்டத்தின் போது, 110 லிட்டர் பசும்பாலை காய்ச்சி இலவசமாக வழங்கினர். அவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி பருகினர்.

கலந்து கொண்டவர்கள்

மாவட்ட தலைவர் ரங்கநாயகலு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேசுநாயக்கர், துணை தலைவர் பரமேசுவரன், இயற்கை விவசாய தலைவர் கருப்பசாமி, மகளிர் அணி தலைவி கிருஷ்ணம்மாள், ஒன்றிய தலைவர் ஜெயராமன், துணை தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் பால் உற்பத்தியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்