கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி படிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-;

Update: 2017-06-13 23:15 GMT
கிருஷ்ணகிரி,

தமிழக அரசால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கென 26 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. அதன்படி பள்ளி மாணவர்களுக்கு 14 விடுதிகளும், மாணவிகளுக்கு 8 விடுதிகளும், கல்லூரி மாணவர்களுக்கு ஒரு விடுதியும், மாணவிகளுக்கு 2 விடுதிகளும், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு விடுதியும் செயல்பட்டு வருகிறது. பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளும் சேர தகுதியுடையவர்கள் ஆவர்.

தமிழக அரசால் மாணவ, மாணவிகளுக்கு உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும். அத்துடன் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 4 செட் சீருடைகள், இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படுகிறது. 10 மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி நூல்கள், வினா வங்கி புத்தகம் வழங்கப்படுகிறது. விடுதிகளில் சேருவதற்கு, பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சமர்ப்பிக்க வேண்டும்

இருப்பிடத்திலிருந்து படிக்கும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளிகளிடமோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்று, பூர்த்தி செய்து வழங்கிடலாம். பள்ளி மாணவ, மாணவிகள் வருகிற ஜூலை 12-ந் தேதிக்குள்ளும், கல்லூரி மாணவ, மாணவிகள் ஜூலை 21-ந் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கும் போது தங்களது சாதிச்சான்று, பெற்றோரது ஆண்டு வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஆதார் கார்டு மற்றும் புகைப்படம் ஆகியவற்றை இணைத்திட வேண்டும். கலந்தாய்வின் போது தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகள் தங்களது பெயரில் ஒரு வங்கி கணக்கை தொடங்கி வங்கி கணக்கு புத்தகத்தின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் ஒவ்வொரு விடுதிகளிலும் மாற்றுத்திறனாளிகள் 3 சதவீதம் பேர் அனுமதிக்கப்படுவார்கள். எனவே, மாணவ, மாணவிகள் அரசின் இச்சலுகையினை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்