கிராம மக்களுக்கு நீண்டநாள் பலன் தரக்கூடிய திட்டங்களை தயாரிக்க வேண்டும்

கிராம மக்களுக்கு நீண்டநாள் பலன் தரக்கூடிய திட்டங்களை தயாரிக்க வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் ஆசியா மரியம் அறிவுறுத்தினார்.

Update: 2017-06-13 23:05 GMT
நாமக்கல்,

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் கிராம ஊராட்சிகளில் வளர்ச்சி திட்டங்கள் தயாரித்தல் குறித்து வட்டார அளவிலான அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமிற்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கிராமங்களை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு ஏற்றவாறு, கிராம மக்களிடம் நேரிடையாக கருத்துக்களை அறிந்து கலந்தாலோசித்து எந்த கிராமத்திற்கு எந்த மாதிரியான திட்டங்கள் தேவை என்பதை அறிந்து அலுவலர்கள் திட்டங்களை தயாரித்திட வேண்டும். திட்டமிடுதல் மிகச்சரியாக இருந்தால்தான் அந்த திட்டம் முழு வெற்றியடைய முடியும். மக்களுக்கு தேவையான திட்டங்களை தேர்ந்தெடுத்து அதற்கான திட்ட வரைவை அலுவலர்கள் முழுமையாக தயாரித்திட வேண்டும். அதற்கு முன்னர் கிராமங்களை பற்றிய தெளிவான விவரங்களை தெரிந்து கொண்டு, அக்கிராமத்திற்கு தேவையான திட்டத்தை அறிந்து அந்த திட்டம் மக்களுக்கு நீண்ட நாள் பலன் தரக் கூடியதாக அமையுமாறு அத்திட்டங்களை தயாரித்து வெளியிட வேண்டும்.

திட்ட மதிப்பீடு

முன்பெல்லாம் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கழிப்பிடங்கள் கட்டுவதற்கு ஏராளமான திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. இதனால் கிராமங்கள், நகரங்கள் என அனைத்து பகுதிகளிலும் பொதுக்கழிப்பிட கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. தற்போது இல்லங்கள் தோறும் தனிநபர் கழிப்பிடம் கட்டும் பணியும் தொடர்்ந்து நடைபெற்று வருகிறது.

திட்டங்கள் மக்களின் எதிர்கால தேவையை நிறைவேற்றுவதாகவும், எதிர்காலத்திற்கு மிகவும் பயன் உள்ளதாகவும் இருத்தல் வேண்டும். இப்பயிற்சி முகாமில் தெரிவிக்கப்படுகின்ற கருத்துக்களை கொண்டு கிராம வளர்ச்சிக்கான திட்டங்களையும், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்களையும் அலுவலர்கள் தயாரித்து அரசிற்கு வழங்கிட வேண்டும். அதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து மக்களோடு இணைந்து திட்ட மதிப்பீட்டை தயாரித்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, மாவட்ட ஊராட்சி செயலாளர் பிரியா உள்பட வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்