இரவுநேர ஓட்டல்களை போலீசார் தாக்கியதை கண்டித்து வியாபாரிகள் கடை அடைப்பு; சாலை மறியல்

வேப்பூரில் இரவுநேர ஓட்டல்களை போலீசார் தாக்கியதை கண்டித்து வியாபாரிகள் கடைகளை அடைத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-06-13 22:30 GMT

வேப்பூர்,

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே மேல்நாரியப்பனூரில் பிரசித்திபெற்ற புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு பெருவிழாவையொட்டி நேற்று ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இந்த தேர்பவனியை காண்பதற்காக கடலூர் மாவட்டம் விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம், திட்டக்குடி, பெண்ணாடம், காட்டுமன்னார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் நேற்று முன்தினம் மாலை பாதயாத்திரையாக மேல்நாரியப்பனூருக்கு புறப்பட்டனர்.

செல்லும் வழியில் வேப்பூர் கூட்ரோட்டில் உள்ள 25–க்கும் மேற்பட்ட இரவுநேர ஓட்டல்களில் அவர்கள் சாப்பிட்டனர். இதனால் இரவு 10 மணி அளவில் ஓட்டல்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. வியாபாரமும் விருவிருப்பாக நடைபெற்றது.

பொருட்களை அடித்து நொறுக்கிய போலீசார்

அப்போது வேப்பூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையில் பயிற்சி சப்–இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் 10–க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் இரவில் ஓட்டல்களை திறக்க கூடாது, உடனடியாக மூட வேண்டும் என்று கூறி திடீரென ஓட்டல்களில் இருந்த நாற்காலி, மேஜை உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்த மின்விளக்குகளை அடித்து உடைத்ததுடன், சமைத்து வைத்திருந்த உணவுகளையும் கீழே கொட்டியதாகவும் தெரிகிறது. இதை தட்டிக்கேட்ட ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களையும் தாக்கி விட்டு போலீசார் அங்கிருந்து சென்று விட்டனர்.

போலீஸ் நிலையம் முற்றுகை

இதனால் ஆத்திரமடைந்த ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு வேப்பூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அங்கிருந்த போலீசாரிடம், ஓட்டல்கள் மீது தாக்கப்பட்டது பற்றி கேட்டனர். ஆனால் போலீசார் சரியான பதிலை தெரிவிக்கவில்லை.

இதையடுத்து வேப்பூர் போலீஸ் நிலையத்தை ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் வணிகர் சங்கத்தினரும், வியாபாரிகளும் அங்கு வந்தனர். பின்னர் ஓட்டல்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்து 13–ந் தேதி(அதாவது நேற்று) முதல் தொடர் கடையடைப்பு போராட்டம் நடத்துவோம் என்று கூறிவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.

கடைகள் அடைப்பு

அதன்படி வேப்பூர் கூட்ரோட்டில் நேற்று காலையில் ஓட்டல்கள் மற்றும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. காலை 10 மணி அளவில் வேப்பூர் கூட்ரோட்டில் வணிகர் சங்கத்தினர் மற்றும் வியாபாரிகள் ஒன்று திரண்டனர். இது பற்றி அறிந்ததும் வேப்பூர் பஸ் நிலைய ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் அங்கு வந்து, பஸ் நிலையம் அருகே நள்ளிரவில் ஆட்டோவுடன் இருந்த எங்களது சங்கத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் தாக்கினார்கள். எனவே உங்களது போராட்டத்துக்கு, எங்களது சங்கத்தை சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்து கலந்து கொள்கிறோம் என்றனர்.

இதனை தொடர்ந்து வணிகர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தினர் விருத்தாசலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் விருத்தாசலம்–சேலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், இது தொடர்பாக திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் தலைமையில் வேப்பூர் போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என்றனர்.

பேச்சுவார்த்தை

இதனை ஏற்ற வணிகர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் மறியலை கைவிட்டு, வேப்பூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது வணிகர்கள் கூறுகையில், இரவு 11 மணி வரை ஓட்டல்களை திறந்து வைத்து வியாபாரம் செய்ய ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் போலீசார் ஓட்டலுக்குள் புகுந்து தாக்கியது தவறு. எனவே போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதனை கேட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும், இரவு 11 மணி வரை ஓட்டலை திறந்து வைத்து வியாபாரம் செய்யலாம் என்றார். இந்த சம்பவம் வேப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்