நெய்வேலியில் என்.எல்.சி. சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

நெய்வேலியில் என்.எல்.சி. சேமிப்பு கிடங்கில் தீ விபத்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலக்கரி எரிந்து சேதம்;

Update: 2017-06-13 22:25 GMT

நெய்வேலி

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலக்கரி எரிந்து சேதமடைந்துள்ளது.

தீ விபத்து

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் சுரங்கம் 1, 1–ஏ, சுரங்கம்–2 ஆகிய 3 சுரங்கங்கள் உள்ளன. இந்த சுரங்கங்களில் இருந்து தினமும் சுமார் 10 ஆயிரம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது.

அவ்வாறு வெட்டி எடுக்கப்படும் நிலக்கரிகள் மின்உற்பத்திக்காக நெய்வேலியில் அமைந்துள்ள 3 அனல் மின் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. மீதமுள்ள நிலக்கரிகள் குடோன்களில் சேமித்து வைக்கப்படுகின்றன.

சுரங்கம் 1–ஏ வில் வெட்டி எடுக்கப்பட்டு சேமிப்பு கிடங்கில் வைத்திருந்த நிலக்கரி நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ வேகமாக பரவி எரிந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், ஊழியர்கள் உடனே என்.எல்.சி. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் என்.எல்.சி. ஊழியர்கள் நீர் தெளிப்பான் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குடோன் முழுவதும் பற்றி எரிவதால், தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இருப்பினும் தீயை அணைக்கும் பணியில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

பல கோடி ரூபாய் சேதம்

இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் உயிர் சேதம் இல்லை. இருந்தபோதிலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலக்கரி எரிந்து சேதமடைந்துள்ளது. விரைவில் தீயை கட்டுப்படுத்தாவிட்டால், சேதமதிப்பு இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

மேலும் செய்திகள்