வளர்ச்சி பணிகள் குறித்து சித்தராமையா வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? எடியூரப்பா கேள்வி

கர்நாடகத்தில் 4 ஆண்டு கால ஆட்சியில் செய்துள்ள வளர்ச்சி பணிகள் குறித்து சித்தராமையா வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? என்று எடியூரப்பா கேள்வி எழுப்பி உள்ளார்.;

Update: 2017-06-13 22:18 GMT

கொள்ளேகால்,

கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி குறித்து பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து அங்கு ஏற்பட்டுள்ள வறட்சி குறித்து ஆய்வு செய்தார். அந்த ஆய்வுக்கு பின்னர் எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

கர்நாடகத்தில் கடந்த பா.ஜனதா ஆட்சியின் போது பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்துள்ளோம். குறிப்பாக சாம்ராஜ்நகர், கொள்ளேகால் தாலுகாக்களில் பாதாள சாக்கடை பணிகளுக்கு தலா ரூ.56 கோடி ஒதுக்கினோம். ஆனால் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகள் ஆகியும் அந்த பாதாள சாக்கடை பணிகள் முடிவடையாமல் உள்ளது.

விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்

இதேபோல் கடந்த ஆட்சியின்போது சாம்ராஜ்நகர், கொள்ளேகால் தாலுகாக்களின் வளர்ச்சிக்காக தலா ரூ.30 கோடியும், குண்டலுபேட்டை தாலுகா வளர்ச்சிக்காக ரூ.20 கோடியும், எலந்தூர் தாலுகா வளர்ச்சிக்காக ரூ.6 கோடியும் ஒதுக்கி இருந்தோம். பா.ஜனதா ஆட்சி காலத்தில் தான் சாம்ராஜ்நகரில் மருத்துவ கல்லூரி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் இன்னும் மருத்துவ கல்லூரியை அமைக்கவில்லை.

மாநில மக்களின் நலனில் அக்கறை இல்லாமல் சித்தராமையா அரசு செயல்படுகிறது. மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்களை மாநில அரசு செயல்படுத்துவதில்லை. ஏனெனில் மத்தியில் பா.ஜனதா அரசுக்கு நற்பெயர் கிடைக்க சித்தராமையா தலைமையிலான அரசு விரும்பவில்லை. இதனால் தான் மாநில அரசு மத்திய அரசை குறை கூறி வருகிறது. மத்திய அரசை குறை கூறுவதை விட்டுவிட்டு மாநில அரசு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

வெள்ளை அறிக்கை

கடந்த 4 ஆண்டுகளில் மாநில அரசு செய்துள்ள வளர்ச்சி பணிகள் குறித்து சித்தராமையா வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா?. ஊழல் மாநிலங்களின் வரிசையில் இந்தியாவிலேயே கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. இது தான் காங்கிரஸ் அரசின் 4 ஆண்டு கால சாதனையாகும்.

மேலும் செய்திகள்