அடகு கடை உரிமையாளரை கொலை செய்து நகை திருடிய வழக்கு: வாலிபருக்கு ஆயுள் தண்டனை

அடகு கடை உரிமையாளரை கொலை செய்து நகை திருடிய வழக்கு: வாலிபருக்கு ஆயுள் தண்டனை திருப்பூர் கோர்ட்டில் தீர்ப்பு

Update: 2017-06-13 23:00 GMT

திருப்பூர்,

அடகு கடை உரிமையாளரை கொலை செய்து நகை திருடிய வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

வாலிபர் கொலை

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி எம்.இடையப்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 31). இவர் தனது சகோதரர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து திருப்பூர் வலையங்காடு பாலமுருகன் நகரில் நகை அடகு கடை வைத்து நடத்தி வந்தார். செல்வத்துக்கு திருமணமாகாததால் நகை அடகு கடைக்குள் இரவு தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 4–7–2015 அன்று காலை நகை அடகு கடைக்கு அருகே உள்ள மைதானத்தில் தலையில் கல்லைப்போட்டு செல்வம் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், செல்வத்தை அவருடைய உறவினரான திருச்சி மாவட்டம் எம்.இடையப்பட்டியை சேர்ந்த பிரபு(34) என்பவர் கொலை செய்தது தெரியவந்தது.

நகை திருட்டு

பிரபு சிங்கப்பூரில் எலெக்ட்ரீசியனாக வேலை செய்து வந்துள்ளார். சொந்த ஊரில் நடந்த திருவிழாவுக்கு வந்தபோது செல்வத்தை பிரபு சந்தித்து பேசியுள்ளார். அப்போது திருப்பூரில் உள்ள நகை அடகு கடை தொழில் நல்ல முறையில் நடந்து வருவதாக செல்வம் கூறியுள்ளார். இதை கேட்ட பிரபுவுக்கு அடகு கடையில் உள்ள நகையை கொள்ளையடிக்க ஆசை ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து திருப்பூர் வந்த பிரபு கடந்த 3–7–2015 அன்று இரவு செல்வத்தின் நகை அடகு கடைக்கு சென்றுள்ளார். நகைகள் வைக்கப்பட்டுள்ள பீரோ அதற்கான சாவியை செல்வம் எங்கு வைக்கிறார் என்பதை பிரபு கண்காணித்துள்ளார். பின்னர் கடையை பூட்டி விட்டு இருவரும் அருகே உள்ள மைதானத்தில் மது அருந்தியுள்ளனர். அதன்பிறகு பிரபு அங்கிருந்த கல்லை எடுத்து செல்வத்தின் தலையில் போட்டு கொலை செய்துள்ளார். பின்னர் செல்வம் வைத்திருந்த நகை அடகு கடை சாவியை எடுத்துக்கொண்டு வந்து கடையை திறந்து கடைக்குள் பீரோவில் இருந்த 359 பவுன் நகையை திருடிவிட்டு தப்பியது தெரியவந்தது.

ஆயுள் தண்டனை

இதைத்தொடர்ந்து பிரபுவை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த நகையை மீட்டனர். பின்னர் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. செல்வத்தை கொலை செய்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், நகையை திருடிய குற்றத்துக்காக 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் பிரபு அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி முகமது ஜியாபுதீன் தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் அரசு வக்கீல் வெங்கடாசலபதி ஆஜராகி வாதாடினார். கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து பிரபுவை போலீசார் கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் செய்திகள்