மசினகுடி வனப்பகுதியில் பாறை பள்ளத்தில் விழுந்து எருமைகள் பலியானதா?

மசினகுடி வனப்பகுதியில் பாறை பள்ளத்தில் விழுந்து எருமைகள் பலியானதா? முதுமலை புலிகள் காப்பக நிர்வாகம் விளக்கம்

Update: 2017-06-13 21:58 GMT

மசினகுடி,

பள்ளத்தில் விழுந்து எருமைகள் பலியானதா? என்பது குறித்து முதுமலை புலிகள் காப்பக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மேய்ச்சலுக்கு சென்ற எருமைகள் மசினகுடி பகுதியில் ஆடு, மாடு, எருமைகள் என ஆயிரக்கணக்கான கால்நடைகள் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. இந்த கால்நடைகள் காலையில் வீட்டை விட்டு காடுகளுக்கு மேய்ச்சலுக்கு சென்று விட்டு, மாலையில் தானாக வீட்டிற்கு திரும்பி வந்துவிடுவது வாடிக்கை. இந்த நிலையில் மசினகுடி பகுதியை சேர்ந்த சிலரது எருமைகள் மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு திரும்பி வரவில்லை என்றும், தேடிப்பார்த்த போது அந்த எருமைகள் மசினகுடி வனச்சரகத்திற்கு உட்பட்ட கூட்டுறவு பாறை என்கிற இடத்தில் இறந்து, அழுகிப்போய் கிடந்ததாக மசினகுடி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

குறிப்பாக 70–க்கும் மேற்பட்ட எருமைகளை வனத்துறை ஊழியர்கள் கூட்டுறவு பாறை பகுதிக்கு ஓட்டி சென்ற போது பள்ளத்தில் விழுந்து இறந்துள்ளதாக குற்றம் சாட்டப் பட்டுள்ளது. இது முதுமலை புலிகள் காப்பக வனத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தவறான தகவல் என்று முதுமலை புலிகள் காப்பக நிர்வாகம் மறுப்பு தெரிவித்து உள்ளது. இது குறித்து அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

கண்காணிப்பு குழு

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும், கால்நடை மேய்ச்சலுக்கும், பொதுமக்கள் உள்ளே செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி உள்ள சீகூர் மற்றும் சிங்காரா வனப்பகுதிகளில் கால்நடை மேய்ச்சலுக்கு அனுமதி இருந்தபோதிலும், அதற்கு கால்நடை மேய்ச்சலுக்கு என்று அனுமதி சீட்டு பெற வேண்டும்.

இந்த நிலையில் மசினகுடியை சுற்றி உள்ள பொதுமக்கள் கால்நடைகளை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு விடும் போது அதனை கண்காணிக்க தனியாக ஆட்களை அனுப்புவதில்லை. இதனால் கால்நடைகள் வழிதவறி தடை செய்யபட்ட முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் வந்துவிடுகின்றன. அவ்வாறு வரும்போது, கால்நடைகளுக்கோ அல்லது வனஉயிரினங்களுக்கோ ஏதேனும் தீங்கு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் அதனை கண்காணிக்க வனப்பணியாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

தவறான தகவல்

அந்த குழு தவறுதலாக முதுமலை புலிகள் காப்பகத்திற்குள் வரும் கால்நடைகளை அப்பகுதியிலிருந்து வெளியில் விரட்டி விடுவது வழக்கம். இந்த நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் நிலையில் மசினகுடியை சேர்ந்த உசேன் மற்றும் வர்கீஸ் ஆகிய இருவர் மசினகுடி வனப்பகுதிக்குள் நுழைந்த தங்களுடைய எருமைகளை கூட்டுறவு பாறை என்ற இடத்திற்கு ஓட்டி சென்று இறக்க செய்துள்ளதாக கூறுவது தவறான தகவல் என்று குறிப்பிடபட்டுள்ளது.

மேலும் அந்த இடத்தில் இறந்து கிடக்கும் ஒரு சில கால்நடைகள் வறட்சி காலத்தில் மேய்ச்சலுக்கு சென்ற போது போதிய பசுந்தீவனம் இன்றியும், தண்ணீர் இன்றியும் இறந்துள்ளன. அவை இறந்து சுமார் ஒரு மாதகாலம் இருக்கும். ஆகவே அந்த எருமைகள் இறந்துள்ளதற்கு வனத்துறை ஊழியர்கள் காரணம் இல்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்