கொடைக்கானல் அருகே 4 வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்

கொடைக்கானல் அருகே 4 வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள் பொதுமக்கள் அச்சம்

Update: 2017-06-13 21:52 GMT

கொடைக்கானல்,

கொடைக்கானல் அருகே 4 வீடுகளை காட்டு யானைகள் சேதப்படுத்தின. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

காட்டு யானைகள்

கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சியை சேர்ந்த பேத்துப்பாறை, அஞ்சு வீடு, கணேசபுரம் போன்ற பகுதிகளில் காட்டு யானைகள் தொடர் அட்டகாசம் செய்து வருகிறது. அவை வீடுகளை சேதப்படுத்துவதோடு, விவசாய பயிர்களையும் நாசப்படுத்தி செல்கின்றன. இதனை வனத்துறையினர் விரட்டும் சம்பவம் வாடிக்கையாக இருந்து வந்தது.

இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு புகாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதியாக இருந்தனர். இதற்கிடையில் நேற்று அதிகாலை பேத்துப்பாறை கிராமத்துக்குள் 4 காட்டு யானைகள் புகுந்தன. பின்னர் அங்குள்ள இடும்பன், நிஷாந்த், ஜெயசீலன் பெத்தம்மாள் ஆகியோரின் வீடுகளை சேதப்படுத்தியது.

பொதுமக்கள் அச்சம்

யானைகள் சேதப்படுத்துவதை கண்ட வீட்டில் இருந்தவர்கள் பின் பக்கமாக ஓடி உயிர் தப்பினர். யானைகள் தாக்கியதில் வீடுகள் முழுவதும் சேதமடைந்தன. வீட்டில் இருந்த அனைத்து பொருட்கள் நாசமானது. சுமார் 2 மணி நேரம் முகாமிட்டு இருந்த அவை பின்னர் அருகில் உள்ள தோட்டத்துக்குள் புகுந்து வாழை, பலா, கொய்யா மரங்களை சேதப்படுத்தின. பின்னர் அவை தானாக வனப்பகுதிக்குள் சென்றன. காட்டுயானைகள் மீண்டும் அட்டகாசம் செய்துள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, யானைகள் சேதப்படுத்தியதால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தங்குவதற்கு வீடுகள் இன்றி தவிக்கிறோம். எனவே அரசு உடனடியாக நிதி உதவி வழங்க வேண்டும். மேலும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்