தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2017-06-13 21:47 GMT

தேனி,

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழிலாளர் துறை அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். பொருளாளர் தர்மர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். கட்டுமான தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தொழிலாளர் நலத்துறை அலுவலர்களை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.

கோரிக்கை மனு

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஞானசேகரனிடம், கட்டுமான தொழிலாளர்கள் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், ‘சி.ஐ.டி.யு. இணைப்பு சங்கங்களின் மூலம் விபத்து மரணம், இயற்கை மரணம் மற்றும் ஓய்வூதிய நிதி கேட்டு கொடுக்கப்பட்ட மனுக்கள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு உள்ளன.

தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் நேரிலும், கடிதம் மூலமும் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே தொழிலாளர்களின் கேட்பு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, வாரிய பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்