மும்பையில் டி.வி. நடிகை மர்மச்சாவு வீட்டில் அழுகிய நிலையில் உடல் மீட்பு

மும்பையில் டி.வி. நடிகை ஒருவர் மர்மமான முறையில் வீட்டில் பிணமாக கிடந்தார். போலீசார் அழுகிய நிலையில் கிடந்த அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2017-06-13 22:45 GMT

மும்பை,

ஹரித்துவாரை சேர்ந்த டி.வி. நடிகை கிருத்திகா சவுத்ரி. இவர் கடந்த 2011–ம் ஆண்டு மும்பை வந்தார். இவர் ‘பரிச்சே நாயே சின்தகி கே சப்னோ கா’ என்ற டி.வி. நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனார். இவர் அந்தேரி, ஸ்ரீபைராவாநாத் குடியிருப்பில் 5–வது மாடியில் வசித்து வந்தார். இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக குடியிருப்புவாசிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு போலீசார் நடிகையின் வீட்டிற்கு சென்றனர். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அழுகிய நிலையில் பிணம்

அப்போது நடிகை வீட்டிற்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது தலையில் காயம் இருந்தது. அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. நடிகையின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூப்பர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நடிகை கிருத்திகா சவுத்திரி உயிரிழந்து 3 அல்லது 4 நாட்கள் ஆகியிருக்கலாம் என போலீசார் கூறினர்.

நடிகை எப்படி இறந்தார்? என்பது உடனடியாக தெரியவில்லை. அதுபற்றி விவரம் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். தற்போது போலீசார் இதுகுறித்து விபத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை ஒருவர் வீட்டில் இருந்து அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்தேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்