10–ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு தமிழர்கள் நிர்வகிக்கும் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை

10–ம் வகுப்பு தேர்வில் தமிழர்கள் நிர்வகிக்கும் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளன.

Update: 2017-06-13 22:45 GMT

மும்பை,

மராட்டியத்தில் நேற்று எஸ்.எஸ்.சி. எனப்படும் 10–ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், 88.74 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர்.

10–ம் வகுப்பு தேர்வில் மும்பையில் தமிழர்கள் நிர்வகிக்கும் பள்ளிகள் 100 சதவீதம் மற்றும் அதிக சதவீத மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்து உள்ளன.

காந்தி நினைவு பள்ளி

மாட்டுங்கா லேபர்கேம்பில் உள்ள காந்தி நினைவு ஆங்கில உயர்நிலைப்பள்ளியில் 96 மாணவர்கள் 10–ம் வகுப்பு தேர்வை எழுதி இருந்தனர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்தனர். மாணவி சர்வையா நேஹல் 94.80 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், குப்தா லெக்ராஜ் பப்புலால் 93.60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், சினோக செல்வராஜ் 93.20 சதவீதம் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனர்.

100 சதவீதம் தேர்ச்சி அடைந்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் செல்லத்துரை பாராட்டினார்.

ராமலிங்கம் ஆங்கில பள்ளி

கோவண்டியில் உள்ள ராமலிங்கம் ஆங்கில பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தனர். அந்த பள்ளியில் தேர்வு எழுதிய 56 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். கான் அர்பியா சந்த் 93.60 சதவீதமும், சவுத்ரி ஷாருக் 91.80 சதவீதமும், ஷேக் இக்ரா முகமது ‌ஷகில் 90.40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மூன்று மாணவர்களாக தேர்ச்சி அடைந்தனர்.

தேர்ச்சி அடைந்த மாணவர்களை பள்ளியின் நிறுவன தலைவர் என்.ராமலிங்கம் பாராட்டினார்.

ஜோகேஸ்வரி கிழக்கில் உள்ள பாம்பே தமிழர் பேரவை எஜூகேசன் சொசைட்டி பள்ளி மாணவ, மாணவியர் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தனர். அந்த பள்ளியில் தேர்வு எழுதிய 72 பேரும் வெற்றி பெற்றனர். மாணவர்களை பள்ளி நிறுவனர் ஏ.டி.ராஜ், தலைவர் மொஹிதீன்ஷா, செயலாளர் அமானுல்லா, பொருளாளர் லோக்நாதன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் பாராட்டினார்கள்.

பி.எஸ்.ஐ.ஏ.எஸ். பள்ளி

தாராவியில் பம்பாய் தென்னிந்திய ஆதிதிராவிட மகாஜன சங்கம் நிர்வகிக்கும் பி.எஸ்.ஐ.ஏ.எஸ். பள்ளி மாணவர்கள் 10–ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

அந்த பள்ளியில் அதிகபட்சமாக மாணவர் முஷாபர் 85 சதவீதமும், மாணவி பாக்கியலட்சுமி 83 சதவீதமும், பையாஸ், இன்ஷா ஆகியோர் 77 சதவீதமும் மதிப்பெண்கள் பெற்றனர்.

அவர்களை சங்க பொதுச்செயலாளர் மாறன் நாயகம் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினார்கள்.

காமராஜர் நினைவு பள்ளி

திருநெல்வேலி தெட்சணமாற நாடார் சங்க மும்பை கிளை நிர்வகிக்கும் தாராவி காமராஜர் நினைவு ஆங்கில உயர்நிலைப்பள்ளியில் 170 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினார்கள். இதில் 168 பேர் தேர்ச்சி அடைந்தனர்.

தேர்ச்சி விகிதம் 98.82 சதவீதம் ஆகும். மாணவி கவிதா 96 சதவீதம் பெற்று பள்ளியில் முதல் இடத்தையும், சுமையா ஆயாஸ், மஞ்சித் யாதவ் ஆகியோர் 88 சதவீதம் பெற்று இரண்டாம் இடத்தையும், அபிஷேக் சிங்குமார் 86.40 சதவீதம் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். அவர்களை பள்ளி முதல்வர் மைக்கிள்ராஜ் பாராட்டினார்.

ஜன்சேவா சிக்‌ஷன் சன்ஸ்தா அமைப்பு நடத்தும் ராயல்சிட்டி ஆங்கில உயர்நிலைப்பள்ளி 10–ம் வகுப்பு தேர்வில் 98.48 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளது. அந்த பள்ளி மாணவர் திவாரி அன்கித் 86 சதவீதம் பெற்று பள்ளியில் முதலிடத்திலும், ஹேமானி அப்பாஸ் 85 சதவீதம் பெற்று இரண்டாம் இடத்திலும், மித்தானி பிலால் 77 சதவீதம் பெற்று மூன்றாவது இடத்திலும் தேர்ச்சி பெற்றனர்.

சீத்தாகேம்ப் பஸ்லானி ஸ்டார் ஆங்கில உயர்நிலைப்பள்ளி 85.05 சதவீதமும், தாராவி கம்பன் உயர்நிலைப்பள்ளியில் மாணவர்கள் 84.84 சதவீதமும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

மேலும் செய்திகள்