குளித்தலை தெப்பக்குளம் அருகே பூங்கா அமைக்கப்படும் கலெக்டர் தகவல்

குளித்தலை தெப்பக்குளம் அருகே பூங்கா அமைக்கப்படும் என கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.;

Update: 2017-06-13 23:00 GMT
குளித்தலை,

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள தெப்பக்குளத்தை தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை கலெக்டர் கோவிந்தராஜ் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அதன்பின் அவர் கூறியதாவது:-

கரூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை குடிமராமத்து செய்து குளம், ஏரி, கண்மாய், நீர்நிலைகள் தூர்வாரும் பணி செய்திட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் மொத்தம் 527 குளங்கள் இனங்கண்டறியப்பட்டு இவற்றில் 193 குளங்கள் தூர்வார அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 185 குளங்களில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மண் அள்ளும் பணியும் நடைபெற்று வருகிறது. இதுவரை 2,514 விவசாயிகள் மற்றும் பயனாளிகள் மூலம் மண் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.

பூங்கா அமைக்க நடவடிக்கை

குளித்தலையில் உள்ள பழமை வாய்ந்த தெப்பக் குளத்தை தூர்வாரி மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. குளம் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட உள்ளன. தேவைப்படும் போது திறந்து பயன்படுத்திக்கொள்ளும் வகையில் குளத்தை சுற்றிலும் கம்பிவேலிகள் அமைக்கப்படவுள்ளன. மேலும் குளத்தை சுற்றியுள்ள இடத்தில் சிறிய அளவிலான பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது கோட்டாட்சியர் சக்திவேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், தாசில்தார் அருள் மற்றும் இயற்கை பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்