மருத்துவ திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு ரூ.5 ஆயிரத்து 500 கோடி வழங்கி உள்ளது

தமிழகத்தில் மருத்துவ திட்டங்களை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசு ரூ.5 ஆயிரத்து 500 கோடி வழங்கி உள்ளது என்று மத்திய சித்தா மற்றும் ஆயுர்வேத துறை மந்திரி கூறினார்.

Update: 2017-06-13 23:00 GMT
திருச்சி,

இந்தியா முழுவதும் 100 மாவட்டங்களில் சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதம், யுனானி, யோகா, இயற்கை வைத்தியம் சிகிச்சை முறைகள் அடங்கிய ஆயுஷ் மருத்துவமனைகள் தொடங்கப்பட உள்ளது. இந்த மருத்துவமனைகளை அந்தந்த மாநில அரசுள் நடத்தும். தமிழகத்தில் பல்வேறு மருத்துவ திட்டங்களை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசு இதுவரை ரூ.5 ஆயிரத்து 500 கோடி வழங்கி உள்ளது.

தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் திருவண்ணாமலை, தேனி மாவட்டங்களில் 50 படுக்கை வசதி கொண்ட தலா ஒரு ஆயுஷ் மருத்துவ மனைகள் தொடங்கப்பட உள்ளன.

நீட் தேர்வு

சித்தா மருத்துவக்கல்லூரிகளை பொறுத்தவரை தனியார் தான் அதிகளவில் தொடங்க முன்வருகிறார்கள். எங்களை பொறுத்தவரை மாநில அரசு நிலம் வழங்கினால், ஆயுஷ் மருத்துவமனைகளை தொடங்க தயாராக இருக்கிறோம். தமிழகத்தில் மூலிகை தாவரங்களை பாதுகாத்து வளர்ப்பதற்காக, தமிழக வனத்துறைக்கு மத்திய அரசு ரூ.2 கோடியே 83 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவக்கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நீட் தேர்வின் அடிப்படையிலேயே நடத்தப்படும்.

உலக யோகா தினம்

இந்த ஆண்டு உலக யோகா தினம் வருகிற 21-ந்தேதி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திரமோடி அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். உத்தரபிரதேச முதல்-மந்திரி மற்றும் மத்திய மந்திரிகளும் இதில் பங்கேற்கிறார்கள். உலக யோகா தினம் வரும் ஆண்டுகளில் தமிழகம் உள்பட தென் மாநிலங்களிலும் நடத்தப்படும்.

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் யோகாவை கட்டாய பாடமாக சேர்க்க வேண்டும் என சுற்றறிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. தற்போது உலகம் முழுவதும் 177 நாடுகளில் உலக யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தூய்மை பணி

முன்னதாக திருச்சி பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணிகளை மத்திய மந்திரி ஸ்ரீபத் யசோ நாயக் செய்தார். அவருடன் திருச்சி மாநகர் மாவட்ட பாரதீய ஜனதா தலைவர் தங்க ராஜய்யன் மற்றும் ஏராளமான பா.ஜ.க. நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்