கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்பனையா? தண்ணீரில் அரிசியை போட்டு அதிகாரிகள் ஆய்வு

குடியாத்தம் பகுதி அரிசி கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுகிறதா? என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அரிசியை தண்ணீரில் போட்டு நேற்று சோதனை நடத்தினர்.

Update: 2017-06-13 23:00 GMT
குடியாத்தம்,

தமிழகத்தில் அரிசி விலை உயர்ந்து வரும் நிலையில் பிளாஸ்டிக் அரிசியும் விற்கப்படுகிறது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடையில் விற்கப்படுவது பிளாஸ்டிக் அரிசியா என்பதை கண்டறிய வழிமுறைகளும் விளக்கப்பட்டன. மேலும் அனைத்து அரிசிக்கடைகளில் சோதனை நடத்த உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, வேலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் வெங்கடேசன் உத்தரவின்பேரில் குடியாத்தத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர் முனியராஜ் மற்றும் அலுவலர்கள் அரிசிக்கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

அவர்கள் தரணம்பேட்டை பஜார், தினசரி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள அரிசி மொத்த மற்றும் சில்லரை வியாபார கடைகளில் பிளாஸ்டிக் அரிசி உள்ளதா என சோதனை நடத்தினர். அரிசியை அவர்கள் தண்ணீரில் போட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தண்ணீரில் அரிசி மிதக்கவில்லை. இதனால் பிளாஸ்டிக் அரிசி இல்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து நெல்லூர்பேட்டை, நேதாஜிசவுக், பஸ் நிலையம், சித்தூர்கேட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பேக்கரி கடைகளிலும் உணவு பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டன.

நம்ப வேண்டாம்

அரிசி கடைகளில் மேற்கொண்ட ஆய்வு குறித்து குடியாத்தம் நெல், அரிசி வியாபாரிகள் சங்க நிர்வாகி எஸ்.ஜி.எம்.விநாயகம் கூறுகையில், “பிளாஸ்டிக் அரிசி என்பது முற்றிலும் வதந்தியே. அதனை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்” என்றார்.

மேலும் செய்திகள்