பாதாள சாக்கடைக்காக தோண்டிய பள்ளத்தில் கவிழ்ந்த மாட்டுவண்டி கூலி தொழிலாளி உயிர் தப்பினார்
திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தெருக்கள், சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இப்பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வரும் நிலையில் பல இடங்களில் பள்ளங்கள் மூடப்படவில்லை.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தெருக்கள், சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இப்பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வரும் நிலையில் பல இடங்களில் பள்ளங்கள் மூடப்படவில்லை. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் அந்த பள்ளங்களில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று திருப்பத்தூர் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளியான சேட்டு (வயது 45) என்பவர் மாட்டு வண்டியில் துணி பண்டல்களை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் பெரியகுளம் மேடு பகுதியில் உள்ள குடோனில் இறக்குவதற்காக சென்று கொண்டிருந்தார்.
பெரியகுளம் மேடு பகுதியில் தெருவின் நடுவில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக மாட்டு வண்டி நிலை தடுமாறி பள்ளத்தில் தலைகீழாக கவிழந்தது. இதில் துணி பண்டல்களுக்கு இடையே சேட்டு சிக்கிக்கொண்டார். வண்டியில் பூட்டப்பட்டிருந்த மாடும் பள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடியது.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக திருப்பத்தூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அதிகாரி பன்னீர்செல்வம் தலைமையில், தீயணைப்பு படையினர் பொதுமக்கள் உதவியுடன் நீண்ட நேரம் போராடி சேட்டுவையும் அவரது மாட்டினையும் உயிருடன் மீட்டனர்.
பள்ளம் தோண்டப்பட்டு இருந்த இடத்தில் கான்கிரீட் கலவைகள் அரைகுறையாக போடப்பட்ட நிலையில் கம்பிகள் ஒவ்வொன்றும் வெளியே தூக்கிக்கொண்டு இருந்தது. மாட்டுவண்டி, அதிலிருந்த பாரம் கவிழ்ந்ததில் அந்த கம்பிகள் மடங்கிவிட்டன. இல்லையென்றால் கண்டிப்பாக உயிர்தேசம் நிகழ்ந்திருக்கும்.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தோண்டப்படும் பள்ளங்களில் கான்கிரீட் பணி, குழாய் பதிப்பு பணியை உடனடியாக முடித்துவிட்டு, பள்ளங்களை நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.