3 குடிசைகளில் பயங்கர தீவிபத்து கியாஸ் சிலிண்டரும் வெடித்ததால் பரபரப்பு

குடியாத்தத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 3 குடிசைகள் எரிந்து நாசமாயின. தீ விபத்தின்போது ஒரு குடிசையில் இருந்த கியாஸ் சிலிண்டரும் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-06-13 23:00 GMT

குடியாத்தம்,

குடியாத்தம் கவுதமபேட்டை கஸ்பா புதுமனை பகுதியில் குடிசை வீடுகள் அருகருகே உள்ளன. நேற்று மதியம் இங்கு வசிக்கும் சுமித்ரா என்பவரது குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்தது. அடுத்த வினாடியே அருகில் வசிக்கும் நிர்மலா, நாராயணன் ஆகியோரது வீடுகளிலும் தீப்பற்றி எரிய தொடங்கியது.

உடனடியாக வீடுகளில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு தப்பித்து வெளியில் வந்தனர். இது குறித்து முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஆர்.மூர்த்தி, புரட்சி பாரதம் மாவட்ட செயலாளர் மேகநாதன் ஆகியோர் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசார் மற்றும் வருவாய்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

வெடித்தது

அதற்குள் சுமித்ரா வீட்டிலிருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் அந்த பகுதியே அதிர்ந்தது. அந்த பகுதியில் வசித்தவர்கள் அங்கு அதிர்ச்சியுடன் திரண்டு வந்தனர். சிலிண்டர் வெடித்தபோது அருகில் யாரும் இல்லாததால் விபரீதம் தவிர்க்கப்பட்டது. மேலும் நாராயணன் என்பவரது வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் தீயணைப்பு படையினர் அரைமணி நேரம் போராடி தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் 3 குடிசை வீடுகளில் இருந்த பொருட்கள், துணிமணிகள், சிறு நகைகள் எரிந்து நாசமாயின. மேலும் சுமித்ரா வீட்டில் இருந்த ரூ.25 ஆயிரம் தீயில் நாசமானது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசாரும், வருவாய் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்