நின்று கொண்டிருந்த பஸ் மீது லாரி மோதியது சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் சாவு

நின்று கொண்டிருந்த பஸ் மீது லாரி மோதிய விபத்தில் சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.;

Update: 2017-06-13 22:45 GMT

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரத்தில் இருந்து சென்னை நோக்கி நேற்று அதிகாலை அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சில் 20–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அதிகாலை 4½ மணியளவில் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கம் நிறுத்தத்தில் பஸ் நின்றது. பயணிகள் பஸ்சில் இருந்து இறங்கிக் கொண்டு இருந்தனர்.

அப்போது ஆந்திர மாநிலம் மதனபள்ளியில் இருந்து நாவல்பழம் ஏற்றி வந்த மினி லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து பஸ்சின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது.

3 பேர் சாவு

இதில் பஸ்சின் பின்பகுதியும், லாரியின் முன்பகுதியும் நொறுங்கியது.

பஸ்சின் பின் இருக்கையில் இருந்த சென்னை ஆவடி ஆயுதப்படையில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ராதாகிருஷ்ணன் (வயது 53) மற்றும் லாரியில் இருந்த மதனபள்ளியை சேர்ந்த வெங்கடராஜுலு (45), நாகராஜ் (30) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

லாரி டிரைவர் ஸ்ரீநாத், மற்றும் லாரியின் பின்புறம் இருந்த ஏழுமலை, வீரராகவன், ஆறுமுகம், மணி, வெங்கடேசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

காயம் அடைந்த 6 பேரும் சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்