மணலியில் 2 மகள்களுடன் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை மனைவி மாயம்? போலீஸ் விசாரணை

மணலியில் தொழிலாளி 2 மகள்களுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாயமான அவருடைய மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2017-06-13 23:00 GMT

திருவொற்றியூர்,

சென்னை மணலி சி.பி.சி.எல். நகர் 12–வது தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 38). எண்ணூர் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரின் மனைவி ஆஷா (30). தனியார் தொழிற்சாலையில் வேலை செய்தார். இவர்களின் மகள்கள் கவிதாலயா (13), காவியபிரியா (8). கவிதாலயா 8–ம் வகுப்பும், காவியபிரியா 4–ம் வகுப்பும் படித்து வந்தனர்.

சங்கர் புதிதாக வீடு கட்டினார். மேலும் குடும்பம் நடத்த பணம் இல்லாமல் பலரிடம் வீட்டின் பத்திரத்தை வைத்து கடன் வாங்கினார். ஆஷாவும் சிலரிடம் கடன் வாங்கினார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

மனைவியுடன் தகராறு

சங்கருக்கும், ஆஷாவுக்கும் இடையே நேற்று முன்தினம் காலை மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆஷாவை வேலைக்கு போக வேண்டாம் என கூறி சங்கர் தடுத்தார். ஆனால் அதை மீறி ஆஷா வேலைக்கு சென்று விட்டார். மகள்களும் பள்ளிக்கு சென்று விட்டனர்.

வேலைக்கு சென்ற ஆஷா மாலையில் வீடு திரும்பவில்லை. கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்து வந்த நிலையில், மனைவியும் தன் பேச்சை கேட்காமல் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லையே என சங்கர் வேதனை அடைந்தார். இதுகுறித்து மூலக்கடையில் வசித்து வரும் ஆஷாவின் தம்பி சுபாஷிடம் கூறி சங்கர் ஆதங்கப்பட்டு உள்ளார். வேலைக்கு செல்வதாக கூறிச்சென்ற ஆஷா இடையில் வீட்டுக்கு வந்து திருமண விசே‌ஷத்துக்கு செல்வது போல பட்டுப்புடவை, நகை அணிந்து கொண்டு சென்றதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்நிலையில் நேற்று காலை சுபாஷ், சங்கரை செல்போனில் தொடர்பு கொண்டார். சங்கர் செல்போனை எடுத்து பேசாததால் அவருடைய வீட்டுக்கு சுபாஷ் வந்தார். வீடு பூட்டி இருந்ததால் ஜன்னல் வழியாக பார்த்த போது சங்கர், கவிதாலயா, காவியபிரியா ஆகியோர் தூக்கில் தொங்கி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த மணலி போலீசார் அங்கு விரைந்து வந்து 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற ஆஷா இதுவரை வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு உள்ளது.

மனைவி எங்கே?

சங்கர் வீட்டில் போலீசார் சோதனை செய்த போது, அங்கு ஐஸ்கிரீம் பாக்ஸ், வி‌ஷம் ஆகியவை கிடந்தன. எனவே அவர் தன் மகள்களுக்கு ஐஸ்கிரீமில் வி‌ஷம் கொடுத்து பின்னர் தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர், தன் மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் கடன் தொல்லையா? அல்லது குடும்ப தகராறு காரணமா? என விசாரித்து வருகின்றனர். மேலும் ஆஷா என்ன ஆனார் என்று தெரியவில்லை. அவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

மணலியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்