மதுரவாயலில் நடைபயிற்சி சென்ற 2 பெண்களிடம் 13 பவுன் நகை பறிப்பு மர்மநபர்களுக்கு வலைவீச்சு

மதுரவாயலில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த 2 பெண்களிடம் ஒரே நேரத்தில் 13 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-06-13 22:15 GMT

பூந்தமல்லி,

சென்னை மதுரவாயல், வானகரம், போரூர்கார்டன் பேஸ் 1, 10–வது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி பாரதி (வயது 62). அதே பகுதியை சேர்ந்தவர் விஜயா (57).

இவர்கள் இருவரும் தினமும் காலை, மாலை என இரு நேரங்களிலும் அந்த பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டு இருந்தனர்.

நேற்று முன்தினம் மாலையில் இருவரும் வழக்கம் போல் நடைபயிற்சிக்காக வீட்டில் இருந்து புறப்பட்டனர். போரூர் கார்டன் பேஸ் 1, 3–வது தெரு வழியாக இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி 2 பேர் வந்தனர்.

13 பவுன் நகை

மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த நபர் மோட்டார்சைக்கிளில் இருந்து இறங்கி, நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்களை பின்தொடர்ந்து சென்றார்.

திடீரென அந்த நபர் ஒரே நேரத்தில் பாரதி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியையும், விஜயா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியையும் பறித்தார்.

2 பெண்களும் நகையை பறித்த நபரின் சட்டையை பிடித்துக்கொண்டு ‘திருடன், திருடன்’ என கூச்சலிட்டனர். இருப்பினும் அந்த மர்ம நபர் 2 பெண்களையும் கீழே தள்ளிவிட்டு, விட்டு மோட்டார்சைக்கிளில் ஏறி இருவரும் தப்பி சென்று விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்