உழவர் பயிற்சி நிலையம் மூலம் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் உழவர் பயிற்சி நிலையம் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பம் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

Update: 2017-06-13 19:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் உழவர் பயிற்சி நிலையம் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பம் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளதாவது;–

சாகுபடி முறைகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் உழவர் பயிற்சி நிலையம், வேளாண் இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் இயங்கி வருகிறது. அங்கு, விவசாயிகளுக்கு வேளாண் உற்பத்தியை பெருக்கிட புதிய தொழில் நுட்பங்கள், நவீன சாகுபடி முறைகள் ஆகியவற்றை பயிற்சிகள் மூலமும் செயல் விளக்கம் மூலமும் கற்பிக்கப்படுகிறது.

உழவர் பயிற்சி நிலையத்தின் கீழ், மாவட்டம் முழுவதும் 160 உழவர் பயிற்சி மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு உழவர் மன்றத்திலும் 20 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களுக்கு உழவர் பயிற்சி நிலைய அலுவலர்கள் தேவையான வேளாண் தொழில்நுட்பங்களை பயிற்சி மற்றும் ஆலோசனை மூலம் வழங்கி வருகின்றனர்.

விவசாயிகளுக்கு...

உழவர் பயிற்சி நிலையம் மூலம் விவசாயிகளிடையே புதிய தொழில் நுட்பங்களை பரப்புவதற்காக பல்வேறு விதமான பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. உழவர் பயிற்சி நிலையம் மூலம் ஆண்டுக்கு 22 பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதில் ஒரு பயிற்சிக்கு 25 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சிகளும், செயல் விளக்கங்களும் காண்பிக்கப்படுகின்றன.

2017–18–ம் நிதியாண்டின் படி உழவர் பயிற்சி நிலையம் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சிகள் விரைவில் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சிகள் தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குனர் செல்வராஜ் உத்தரவின் படி, வேளாண்மை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) பாரதி மற்றும் வேளாண்மை அலுவலர் ராமலட்சுமி ஆகியோர் மூலம் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்