கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-06-12 23:58 GMT

கோவில்பட்டி,

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யூனியன் அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டி அருகே உள்ளது ஈராச்சி கிராமம். இந்த கிராமத்தில் குடிநீர், தெருவிளக்கு, பொது கழிப்பறை, சமுதாய நலக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். அங்குள்ள காலனியில் வசிக்கும் மக்களுக்கும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். சுடுகாட்டை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தை நேற்று காலையில் முற்றுகையிட்டனர்.

தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு அமைப்பாளர் மேரி ஷீலா தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் தமிழரசன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நல்லையா, தாலுகா செயலாளர் லெனின்குமார், இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் சேதுராமலிங்கம் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

முற்றுகையிட்டவர்களிடம் யூனியன் ஆணையாளர் சேவுக பாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) ஈராச்சி கிராமத்தில் நேரில் ஆய்வு செய்து, அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சிறிது நேரம் யூனியன் அலுவலகத்தில் பரபரப்பு காணப்பட்டது.


மேலும் செய்திகள்