ஆதிதிராவிடர், சிறுபான்மையினர், அதிகாரிகள் என அனைத்து தரப்பினரையும் மோடி அரசு மிரட்டுகிறது

‘‘நாட்டில் ஆதிதிராவிடர்கள், சிறுபான்மையினர், அதிகாரிகள் என அனைத்து தரப்பினரையும் மோடி அரசு மிரட்டுகிறது’’ என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

Update: 2017-06-12 22:20 GMT

பெங்களூரு

‘‘நாட்டில் ஆதிதிராவிடர்கள், சிறுபான்மையினர், அதிகாரிகள் என அனைத்து தரப்பினரையும் மோடி அரசு மிரட்டுகிறது’’ என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

ராகுல் காந்தி

‘‘நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆவதையொட்டி காங்கிரஸ் கட்சியின் நே‌ஷனல் ஹெரால்டு பத்திரிகை நினைவு பதிப்பு வெளியீட்டு விழா பெங்களூரு வசந்த்நகரில் உள்ள அம்பேத்கர் பவனில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு அந்த பத்திரிகையை வெளியிட்டு பேசியதாவது:–

‘‘நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், உண்மையை நசுக்க முயற்சி செய்கிறார்கள். அதாவது உண்மையின் சக்தியை ஆட்சி அதிகார சக்தி மாற்றி அமைக்கிறது. உண்மையை பேச முயற்சிப்பவர்களும் ஆதரிப்பவர்களும் அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள். மத்தியில் ஆளும் மோடி அரசு, என்ன நடந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. ஆதிதிராவிடர்கள் தாக்கப்படுகிறார்கள். சிறுபான்மையினர், பத்திரிகையாளர்கள், அதிகாரிகளை மோடி அரசு மிரட்டுகிறது. இன்று ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள், தாங்கள் என்ன நினைக்கிறார்களோ அதை அவர்களால் எழுத முடியவில்லை.

உண்மையை உற்பத்தி செய்கிறார்கள்

மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க நான் அந்த மாநிலத்திற்கு சென்றேன். ஆனால் என்னை விவசாயிகளை சந்திக்க விடாமல் அந்த மாநில போலீசார் மாநில எல்லையிலேயே தடுத்து நிறுத்திவிட்டனர். இது தான் இந்தியா. இங்கு தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தற்போது நாட்டில் அதிகாரம் படைத்தவர்கள் உண்மையை உற்பத்தி செய்கிறார்கள்.

ரஷிய கவிஞர் ஒருவர் ‘‘உண்மைக்காக குரல் கொடுக்காமல் அமைதியாக இருப்பதும் பொய் தான்’’ என்று கூறி இருக்கிறார். இதை தான் மத்திய அரசு தற்போது செய்து கொண்டிருக்கிறது. உண்மை என்ன என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இதை வெளியே சொல்ல அவர்கள் பயப்படுகிறார்கள்.

எதிர்பார்ப்பு

நே‌ஷனல் ஹெரால்டு பத்திரிகை ஆசிரியர் என்னை நேரில் சந்தித்து இந்த பதிப்பு வெளியிடுவது குறித்து என்னிடம் பேசினார். இந்த பத்திரிகை எனக்கு எதிராகவோ, காங்கிரசுக்கு எதிராகவோ அல்லது காங்கிரசின் கொள்கைகளுக்கு எதிராகவோ எழுத விரும்பும்போது, அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். இதை தான் இந்த பத்திரிகையிடம் இருந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த பத்திரிகை ஒரு பலமான மனநிலையை கொண்டது. இது அமைதியாக இருக்காது.’’

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

துணை ஜனாதிபதி

இந்த விழாவில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, கவர்னர் வஜூபாய் வாலா, முதல்–மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையம் வந்த துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, ராகுல் காந்தி ஆகியோருக்கு முதல்–மந்திரி சித்தராமையா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

மேலும் செய்திகள்