சனிவாரசந்தே மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 2 காட்டுயானைகள் அட்டகாசம்

சனிவாரசந்தே மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 2 காட்டுயானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

Update: 2017-06-12 22:10 GMT

குடகு

சனிவாரசந்தே மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 2 காட்டுயானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. அந்த காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம்

குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா சனிவாரசந்தே மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளன. இதனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, யானை உள்ளிட்ட விலங்குகள் இந்த கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

வனவிலங்குகள் கிராமங்களுக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இருந்தும் வனவிலங்குகள் கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது வாடிக்கையாகி வருகிறது.

அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட...

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் 2 காட்டுயானைகள், இந்த கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கிராமத்தில் உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து அங்குள்ள காபிச் செடிகள், மிளகு மற்றும் வாழை, பாக்கு மரங்கள் ஆகியவற்றை பிடுங்கி தின்றும், காலால் மிதித்தும் நாசப்படுத்தி வருகின்றன. இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் அந்தப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் அளவில் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த அவர்கள் அந்த காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். காட்டுயானைகளின் அட்டகாசத்தால் அப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பீதியில் உள்ளனர்.


மேலும் செய்திகள்