ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 14 பவுன் நகை–பணம் கொள்ளை

மேல்புறம் அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 14 பவுன் நகை– பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2017-06-12 23:00 GMT
குழித்துறை,

மேல்புறம் அருகே உள்ள மாவறதலைவிளையை சேர்ந்தவர் தங்கமணி (வயது 62). சென்னையில் அரசு  ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தற்போது, இவரது மகன் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இந்தநிலையில், கடந்த 8–ந் தேதி தங்கமணி மாவறதலைவிளையில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்றார்.

பின்னர், நேற்று காலையில் தங்கமணி ஊருக்கு வந்தார். வீட்டுக்கு சென்ற போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் உள்ளே பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், படுக்கை அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 14 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.8 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்தி யாரோ மர்ம நபர்கள் கதவை உடைத்து, நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

போலீசில் புகார்

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த கொள்ளை குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்