கலெக்டர் அலுவலகத்தில் குடியேற முயற்சி: டேங்க் ஆபரேட்டர்கள்–துப்புரவு பணியாளர்கள் 167 பேர் கைது

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் குடியேற முயன்ற டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் 167 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-06-12 23:00 GMT
ஈரோடு,

அரசாணைகளின்படி சம்பளம் மற்றும் நிலுவை தொகைகள் முறையாக வழங்கப்படவில்லை என்று கூறி கிராம பஞ்சாயத்து டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்கம் சார்பில், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மற்றும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஆகியோரை கண்டித்து, ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் 3–வது தளத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாநில தலைவர் ஈ.வி.கே.சண்முகம் தலைமையில் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் நேற்று காலை ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒன்று கூடினார்கள்.

167 பேர் கைது


பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மற்றும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஆகியோரை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

அதைத்தொடர்ந்து டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மற்றும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) அலுவலகங்களில் குடியேற முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 53 பெண்கள் உள்பட மொத்தம் 167 பேரை போலீசார் கைது செய்து ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்