பல் மருத்துவக்கல்லூரி தொடங்கும் பணி முழு வீச்சில் நடக்கிறது அமைச்சர் தகவல்

விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

Update: 2017-06-12 22:45 GMT
சாத்தூர்,

சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில், மகப்பேறு பிரிவு கட்டிட திறப்பு விழா கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு ரூ.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு பிரிவு கட்டிடத்தினை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பட்டாசு விபத்தில் உயிரிழந்தவரின் வாரிசுதாரர் ஒருவருக்கு சத்துணவு உதவியாளர் பணி நியமன ஆணையினையும் வழங்கினார். விழாவில் பேசும் போது அவர் தெரிவித்ததாவது:-

ஏழை, எளிய மக்கள் மருத்துவ சேவைகளை தங்கள் இருப்பிடங்களுக்கு அருகாமையிலேயே பெறும் வகையில் பல்வேறு இடங்களில் துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், விருதுநகரில் அரசு பல் மருத்துவக் கல்லூரி அமைய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து அதற்கான பணியும் முழுவீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அக்கறை

நடமாடும் ஆஸ்பத்திரிகள் மூலம் பல்வேறு கிராமங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது போன்ற எண்ணற்ற திட்டங்கள் மூலம் ஏழை, எளிய மக்களும் உயர்தர சிகிச்சை பெற வழிவகை செய்தவர் ஜெயலலிதா தான். அவருடைய வழிகாட்டுதலின் படி நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழக அரசு பொது மக்களின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விழாவில், விருதுநகர் எம்.பி. ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் சுப்பிரமணியன், சந்திரபிரபா, சாத்தூர் கோட்டாட்சியர் கிருஷ்ணம்மாள், தாசில்தார் முத்துலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்