ஆங்கில வழிக்கல்வியில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு தொடங்க வேண்டும் கலெக்டரிடம் மனு

அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம், மாணவ-மாணவிகள் மனு கொடுத்தனர்.;

Update: 2017-06-12 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 276 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

ஆங்கில வழியில் பிளஸ்-1 வகுப்பு தொடங்க...

பெரம்பலூர் அருகே அரும்பாவூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி மூலம் எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவ- மாணவிகள் தங்களது பெற்றோருடன் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், அரும்பாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நாங்கள் அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2012-13-ம் கல்வி ஆண்டு முதல் 6-ம் வகுப்பிலிருந்து ஆங்கில வழிக்கல்வி மூலம் படித்து வருகிறோம். பள்ளியில் மாணவர்களை சேர்க்கும் போது எஸ்.எஸ்.எல்.சி. முடிந்து பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பிற்கும் ஆங்கில வழிக்கல்வி வந்து விடும் என தெரிவித்தனர்.

ஆனால் தற்போது நாங்கள் எஸ்.எஸ்.எல்.சி. முடித்து விட்டோம். ஆனால் பிளஸ்-1 வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி இல்லாததால் தமிழ் வழியில் படிக்குமாறு பள்ளி நிர்வாகத்தினர் கூறுகின்றனர். தனியார் பள்ளியில் சேர்ந்து படித்தால் அதிக செலவாகும் என்பதால் நாங்கள் அரசு பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியில் படிப்பதற்கு வழியின்றி தவிக்கிறோம். எனவே 2017-18-ம் கல்வி ஆண்டிலிருந்து அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு ஆங்கல வழிக்கல்வியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

சலவைத்தொழிலாளர்கள் மனு

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு சலவைத்தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் குரும்பலூரை சேர்ந்த பெண்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில், பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பகுதியில் நிரந்தரமாக வசித்து வரும் சலவை தொழிலாளர்களாகிய எங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில், எங்கள் பள்ளியில் செயல்பட்டு வந்த விடுதியை, சில காரணங்களை கூறி அதிகாரிகள் சீல் வைத்து விட்டனர். பெரம்பலூர், துறையூர், அரியலூர், ஜெயங்கொண்டம் என பல்வேறு இடங்களிலிருந்து வரும் நாங்கள் விடுதியில் தங்கி படிக்க முடியாததால் கடும் சிரமத்திற்கு ஆளாகிறோம். எனவே அந்த விடுதியை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொட்டரை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி காலிக்குடங்களுடன் வந்து மனு கொடுத்தனர். பெரம்பலூர் எறையூர் அருகே நரிக்குறவர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் இலவசவீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தனர்.

பொதுமக்களிடம் இருந்து பல்வேறு மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் சாந்தா, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள் தணிக்கை) பாலன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்