பொய் வழக்கு போடப்பட்டதை திரும்ப பெறக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கரூரில் வக்கீல் மீது பொய் வழக்கு போடப்பட்டதை திரும்ப பெறக்கோரி போலீஸ் நிலையத்தை வக்கீல்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர். கோர்ட்டு புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர்.;

Update: 2017-06-12 23:00 GMT
கரூர்,

கரூர் ராமகிருஷ்ணா புரத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். வக்கீல். குடும்ப விவாகரத்து வழக்கு தொடர்பாக ஒருவருக்காக இவர் வாதாடி வருகிறார். இந்த நிலையில் எதிர்தரப்பை சேர்ந்த சிலர் ராமலிங்கத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ராமலிங்கம் அளித்த புகாரின் பேரில் கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் எதிர்தரப்பை சேர்ந்தவர்களும், வக்கீல் ராமலிங்கம் மீது கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

போலீஸ் நிலையம் முற்றுகை

இந்த நிலையில் வக்கீல் ராமலிங்கம் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும், அவரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என கரூர் வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் மாரப்பன் தலைமையில் ஏராளமான வக்கீல்கள் நேற்று பகல் 11.30 மணி அளவில் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் போலீஸ் நிலைய வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கை தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து வக்கீல்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். அதன்பின் வக்கீல்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

கோர்ட்டு புறக்கணிப்பு

இதற்கிடையில் வக்கீல் ராமலிங்கம் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய கோரியும், அவர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்ப பெறக்கோரியும், போலீசாரை கண்டித்தும் கரூர் கோர்ட்டில் வக்கீல்கள் நேற்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து இன்றும் (செவ்வாய்க்கிழமை) கோர்ட்டு புறக்கணிப்பு செய்வதாகவும், வக்கீல்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என வக்கீல்கள் சங்க தலைவர் மாரப்பன் தெரிவித்தார். வக்கீல்கள் போராட்டத்தால் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்