வேலூரில் தாலிக்கு தங்கம் உள்பட ரூ.3¾ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்

வேலூரில் நடந்த விழாவில் தாலிக்கு தங்கம் உள்பட ரூ.3 கோடியே 76 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.

Update: 2017-06-12 23:15 GMT
வேலூர்,

வேலூரில், சமூக நலத்துறை மூலம் 600 பயனாளிகளுக்கு தாலிக்கு 8 கிராம் தங்கம் மற்றும் நிதியுதவி, 5 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் எந்திரம், இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் 420 சிறு, குறு கிராம கோவில்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கும் விழா மற்றும் ரூ.3 கோடியே 19 லட்சம் மதிப்பிலான 20 புதிய அரசு கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று ஊரீசு கல்லூரியில் நடந்தது.

விழாவுக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் என்.ஜி.பார்த்திபன், லோகநாதன், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆர்.காந்தி, ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், ஈஸ்வரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சமூகநல அலுவலர் மீனா வரவேற்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு, புதிய கட்டிடங்களை திறந்து வைத்து, ரூ.3 கோடியே 76 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், ‘தாலிக்கு தங்கம் கூட வாங்க முடியாத சூழலில் உள்ள மக்களுக்கு, முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா முதலில் 4 கிராம் தங்கம் வழங்கினார். பின்னர், அதனை உயர்த்தி 8 கிராம் தங்கமாக வழங்கினார். உயர்கல்வி படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகையாக ரூ.50 ஆயிரமும், 12-ம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார். வேலூர் மாவட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சகோதரர்களாக ஒன்றிணைந்து மக்களுக்காக பணியாற்றுகிறோம்’ என்றார்.

விழாவில் கலெக்டர் ராமன் பேசியதாவது:-

ஏரிகளை புனரமைக்க...

வேலூர் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கோடை மழையாக 120 மில்லி மீட்டர் பெய்துள்ளது. இதன் மூலம் குடிநீர் பிரச்சினையில் தீர்வு காண முடியும். ஏரிகளில் விவசாயிகள் வண்டல் மண் எடுத்து கொள்ள அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

வேலூர் மாவட்ட அரசு தரப்பில் 947 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் மண் எடுத்து கொள்ள 2,400 விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மழை காலங்களில் ஏரிகளில் மண் எடுக்க முடியாது. இருப்பினும், தொடர்ந்து விவசாயிகளுக்கு தேவைப்படும் போது மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும்.

மாவட்டத்தில் 34 ஏரிகளில் குடிமராமத்து பணி மேற்கொள்ள ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏரிகளின் கால்வாய் பகுதி போன்றவை புனரமைக்கப்பட்டு வருகிறது. மற்ற ஏரிகளை புனரமைக்க ரூ.17 கோடியே 30 லட்சத்துக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கோடையில் உழவு செய்யும் விவசாயிகளுக்கு பல்வேறு கடனுதவிகள் வேளாண்மைத்துறை சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் ஆவின் தலைவர் வேலழகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, சமூக நலத்துறை அலுவலர் மீனா, இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அசோக்குமார், உதவி ஆணையர் சுப்பிரமணியன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்