ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா வெளிநாடு செல்ல அனுமதி கோர்ட்டு வழங்கியது

பணமோசடி வழக்கில் ஜாமீன் பெற்ற நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா இருவரும் வெளிநாடு செல்ல தானே செசன்ஸ் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.

Update: 2017-06-12 20:53 GMT

தானே,

பணமோசடி வழக்கில் ஜாமீன் பெற்ற நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா இருவரும் வெளிநாடு செல்ல தானே செசன்ஸ் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.

வழக்கு

பிரபல இந்த நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா இருவரும் ‘பெஸ்ட் டீல் டிவி’ என்ற சேனலை நிர்வகித்து வந்தனர். இந்த சேனல் மூலம் தனியார் நிறுவனங்களின் பொருளை விளம்பரப்படுத்தி அதை விற்பனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் பலோடிய எஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கடந்த ஏப்ரல் 26–ந் தேதி பிவண்டி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். இதில் ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா இருவரும் தங்கள் சேனல் மூலம் நிறுவனத்தின் படுக்கை விரிப்புகளை விற்றுத்தருவதாக ரூ. 24 லட்சத்தை பெற்றுக்கொண்டு முறைகேடு செய்ததாக தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தானே செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

ஜாமீன் மனு

இதையடுத்து ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா இருவரும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதில் அவர்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இருவரும் வெளிநாடு செல்ல அனுமதி கோரி புதிதாக ஒரு மனுவை தாக்கல் தானே செசன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதில் ‘‘ தொழில்சார்ந்த வேலைகள் காரணமாக ஜூன் 12–ந்(நேற்று) தேதியில் இருந்து ஜூலை 21–ந் தேதிக்குள், லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பயணிக்கவேண்டி இருப்பதாகவும் அதற்கு அனுமதி அளிக்கவேண்டும்’’ எனவும் கூறிருந்தனர்.

அனுமதி வழங்கியது

இந்த மனு செசன்ஸ் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர் தரப்பு வக்கீல் இருவரும் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் ஷில்பா ஷெட்டி தரப்பில் ஆஜரான வக்கீல் அவர்களின் பயணம் குறித்து முழு விவரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும். அவர்களுக்கு அனுமதி மறுப்பது தொழில் ரீதியாக அவர்களை மிகப்பெரிய நெருக்கடிக்குள் தள்ளிவிடும் என்றும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட்டு அவர்கள் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கினார். இருப்பினும் அவர்கள் 21–ந் தேதிக்கு மேல் வெளிநாட்டில் தங்கக்கூடாது என உத்தரவிட்ட அவர், நாடு திரும்பியதும் போலீஸ் நிலையத்திலும், கோர்ட்டிலும் தகவல் அளிக்கவேண்டும் என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்