இருவேறு இடங்களில் கடலில் மூழ்கி 10–ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் பலி

மும்பையில் இருவேறு இடங்களில் கடலில் மூழ்கி 10–ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2017-06-12 20:39 GMT

மும்பை,

மும்பையில் இருவேறு இடங்களில் கடலில் மூழ்கி 10–ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

மாணவன் சாவு

மும்பையில் நேற்றுமுன்தினம் மழை பெய்து கொண்டிருந்த போது கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அப்போது மலபார்ஹில், பிரியதர்ஷினிபார்க் கடலில் சிறுவர்கள் ஆனந்தமாக குளித்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் கடலில் எழுந்த ராட்சத அலை ஒரு சிறுவனை வாரி சுருட்டி உள்ளே இழுத்து சென்றது.

இதில், அவன் கடலில் மூழ்கி தத்தளித்தான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற சிறுவர்கள் கூச்சல் போட்டனர். சிறிது நேரத்தில் அவன் கடலுக்குள் மூழ்கிவிட்டான். உயிர்காக்கும் வீரர்கள் தேடியும் அவனை மீட்க முடியவில்லை. ஹெலிகாப்டர் மூலம் தேடியதில் வெகுநேரத்திற்கு பிறகு அவன் பிணமாக மீட்கப்பட்டான்.

விசாரணையில், பலியான சிறுவன் பெயர் பஹீம் சேக்(வயது15). உத்தரபிரதேசத்தை சேர்ந்த அவன் 10–ம் வகுப்பு படித்து முடித்து இருக்கிறான். கோடை விடுமுறையில் தாராவியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்த போது கடலில் மூழ்கி பலியானது தெரியவந்தது.

ஜூகு கடலில்...

இதேபோல மும்பை சாந்தாகுருசை சேர்ந்த ஜெயேஷ் பெட்னேக்கர்(15) என்ற சிறுவன் ஜூகு கடற்கரையில் நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த போது கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். போலீசார் அவனது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த ஜெயேஷ் பெட்னேக்கர் 10–ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவங்கள் குறித்து அந்தந்த பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்