கையடக்க மொழி பெயர்ப்புக் கருவி

தற்போது இணையதளம் இல்லாமல், தனியே இயங்கும் கையடக்க மொழிபெயர்ப்பு கருவி அறிமுகமாகி உள்ளது.

Update: 2017-06-12 09:08 GMT
ணையதளங்களில் இன்று மொழிபெயர்ப்பு வசதி முக்கிய இடத்தைப் பெறுகிறது. உலக நிகழ்வுகளை தங்கள் தாய்மொழியிலேயே படித்து அறிய, இந்த மொழி பெயர்ப்பு வசதி பெரிதும் உதவுகின்றன. மொழி தெரியாத இடங்களுக்கு பயணிக்க விரும்பும்போதும், இந்த மொழிமாற்ற வசதி கைகொடுக்கும். 

தற்போது இணையதளம் இல்லாமல், தனியே இயங்கும் கையடக்க மொழிபெயர்ப்பு கருவி அறிமுகமாகி உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ‘இலி டிரான்ஸ்லேட்டர்’ நிறுவனம் இந்த கருவியை தயாரித்து வழங்கி உள்ளது. உலகின் முக்கிய மொழிகள் பலவற்றில் இருந்து மொழிபெயர்ப்பு தகவலை ஒலி வடிவில் உச்சரிக்கக்கூடியது இந்தக் கருவி. ஆங்கிலத்தில் இருந்து ஸ்பானிஷ், மாண்டரின் மொழியில் இருந்து ஜப்பானிஷ் உள்ளிட்ட மொழிமாற்றங்கள் சாத்தியம். 

தற்போதைய நிலையில் ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழி மாற்றம் மட்டுமே சாத்தியமாக இருக்கிறது. விரைவில் பல மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு கருவியாக பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதில் திரை எதுவும் கிடையாது. உச்சரிப்பு மூலமே வேற்று மொழி சொற்களை கேட்டுப் பெறலாம். பதிலும் ஒலிவடிவில் உச்சரிப்பாகவே கிடைக்கும். முக்கியமாக பயணங்கள், பொருட்களை வாங்குதல், உணவு விடுதிகளில் பேசும் சொற்கள் போன்றவற்றுக்கான மொழி பெயர்ப்புகள் எளிதில் கிடைக்கும்.

இந்த மாத இறுதியில் அமெரிக்காவிலும், அக்டோபர் மாதம் பிற நாடுகளிலும் இந்த கருவி விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்த கருவி 249 அமெரிக்க டாலர் விலையில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் சுருங்கிவிட்ட நிலையில் மொழி தடுமாற்றத்தைப் போக்கும் கருவிகள் மிகவும் அவசியம்தான்!

மேலும் செய்திகள்