குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட 134 பேர் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர் அதிகாரிகள் தகவல்

வேலூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட 134 பேர் உயர்கல்விக்கு சென்றுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2017-06-11 22:42 GMT
வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் நல்வாழ்வு இயக்கம் சார்பில் குழந்தை தொழிலாளர்களுக்கான சிறப்பு பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. வேலூர், குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆம்பூர், திருப்பத்தூர் பகுதிகளில் மொத்தம் 39 சிறப்பு பள்ளிகள் இயங்கி வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் எங்காவது வேலைசெய்தால் அவர்களை மீட்டு இந்த பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.

குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளியில் 3-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது. இதில் தற்போது 818 மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். 40 ஆசிரியர்கள், 14 கைத்தொழில் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இங்கு படிப்பவர்கள் 5-ம் வகுப்பு முடித்ததும் வேறு பள்ளிகளில் சேர்க்கப்பட்டு மாதம் ரூ.150 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கல்லூரியில் படிப்பவர்களுக்கு மாதம் ரூ.6000 வழங்கப்படுகிறது.

உயர் கல்விக்கு சென்றனர்

தற்போது 2017-2018-ம் கல்வியாண்டிற்கு குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் 818 பேருக்கும் விலையில்லா பாடபுத்தகங்கள் வந்துள்ளன. குழந்தை தொழிலாளர் எதிர்ப்புதினமான இன்று (திங்கட்கிழமை) இந்த பாடபுத்தகங்கள் வழங்கப்படுகிறது. இதற்காக நேற்று கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அந்தந்த பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

பாடப்புத்தகங்கள் தவிர அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களும் வழங்கப்படுவதாகவும், இதுவரை வேலூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு இந்த சிறப்பு பள்ளிகளில் படித்த 134 பேர் என்ஜினீயரிங் போன்ற உயர்கல்விக்கு சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்