தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமையும்? அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதில்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைக்கப்படும் என்பது குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2017-06-11 22:13 GMT
திண்டுக்கல்,

தாடிக்கொம்பு மற்றும் செல்லக்குட்டியூர் ஆகிய இடங்களில் தலா ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பில் புதிதாக அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் பரமசிவம், தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் அனைவரையும்வரவேற்றார்.

விழாவில், பள்ளி கட்டிடங்களை அமைச்சர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பேசினார். அவர் பேசும்போது, தமிழகத்தில் பள்ளி மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில் சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் கல்வித்துறையில் புரட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

அதிகாரிகளுக்கு உத்தரவு

இந்த நிகழ்ச்சியில், திண்டுக்கல் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெயசீலன், அகரம் பேரூர் கழக செயலாளர் அகரம் சக்திவேல், தாடிக்கொம்பு பேரூர் கழக செயலாளர் முத்துராஜ், அவைத்தலைவர் முருகானந்தம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் முத்தையா, பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் அம்மாவாசி, ஸ்ரீதர், குருசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து திண்டுக்கல் அருகே உள்ள பெரிய பள்ளப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பிஸ்மி நகர், ஏ.பி. நகர், எம்.ஜி.ஆர். நகர் ஆகிய பகுதிகளில் ரூ.22 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார். மேலும் இந்த பணிகளை 30 நாட்களுக்குள் முடிக்கவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, முன்னாள் மேயர் மருதராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

எய்ம்ஸ் மருத்துவமனை

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் விவரம் வருமாறு:-

கேள்வி:- தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை தஞ்சாவூரில் அமைக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், மதுரையில் அமைக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். எங்கு அமைக்கப்பட உள்ளது?.
பதில்:- 234 தொகுதி எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மத்திய அரசு எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உத்தரவிடுகிறதோ அங்கு அமைக்கப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். எனவே முதல்- அமைச்சரின் கருத்தே எனது கருத்தாகும்.

கேள்வி:- தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மாநில அரசு தடையாக இருப்பதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளாரே?
பதில்:- மாநில அரசு எந்தவிதத்திலும் தடையாக இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்