ஆக்கிரமிப்புகளால் வியாபாரதலமான நடைபாதைகள் குறுகும் சாலைகள், விழிபிதுங்கும் வாகன ஓட்டிகள்
பெருநகரங்களுக்கு அழகு அவற்றின் உள்கட்டமைப்பே. அதில் சிறந்த சாலை வசதியும் ஒன்று.
பெருநகரங்களுக்கு அழகு அவற்றின் உள்கட்டமைப்பே. அதில் சிறந்த சாலை வசதியும் ஒன்று. அந்த சாலைகளுக்கு அழகு இருபுறத்திலும் உள்ள நடைபாதைகள் தான். நடைபாதைகள் பாதசாரிகளின் பயன்பாட்டிற்கு மட்டுமே. ஆனால் இது மும்பையில் பெயரளவில் தான் பின்பற்றப்பட்டு வருகிறது என்றே கூற வேண்டும்.
ஏனெனில் மும்பையில் நடைபெறும் தொழில்களில் நடைபாதை வியாபாரமும் பிரதானம். இதன் காரணமாக நடைபாதைகள் தங்களுக்கு சொந்தமாக்கப்பட்டவையாகவே நடைபாதை வியாபாரிகள் கருதுகிறார்கள்.
வாகன பெருக்கம்மும்பையில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப சாலை மற்றும் மேம்பால வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மெட்ரோ, மோனோ ரெயில் போன்ற பொது போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
காலை மற்றும் மாலை ஆகிய பிரதான நேரங்கள் மட்டுமின்றி மற்ற நேரங்களிலும் அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
நடைபாதை வியாபாரம்இதற்கு அதிகரித்து வரும் வாகன எண்ணிக்கை என்பது ஒருபுறம் இருந்தாலும், சாலையோர நடைபாதைகளில் இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகள், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்டவையே முக்கிய காரணமாக உள்ளன. மும்பை பெருநகரம் முழுவதும் ஆக்கிரமிப்பு இல்லாத சாலை, நடைபாதைகளை காண்பது அரிது.
குறிப்பாக தாராவி, தாதர், காட்கோபர், மலாடு, செம்பூர், மாட்டுங்கா, சயான், குர்லா, விக்ரோலி, பாண்டு, முல்லுண்டு உள்ளிட்ட பகுதிகளில் சாலை மற்றும் நடைபாதைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. துணிகள், காய்கறிகள், பழங்கள், வீட்டு உபயோக பொருட்கள், செல்போன் கவர்களின் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. நடைபாதையின் பெரும் பகுதியை நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமித்து கொள்கிறார்கள். தள்ளுவண்டிகளில் உணவு பொருட்கள் விற்பனை ஆதிக்கமும் அதிகம். ரெயில் நிலைய நடைமேம்பாலங்களும், பஸ் நிறுத்தங்களும் நடைபாதை வியாபாரிகளிடம் இருந்து தப்பவில்லை.
விளைவு! பொதுமக்கள் நடப்பதற்காக அமைக்கப்பட்டு உள்ள நடைபாதைகள் என்பது வியாபாரம் செழிக்கும் இடமாக மாறி உள்ளது. இதை பயன்படுத்தி வியாபாரிகள் பணமழையில் நனைகிறார்கள். அவர்களால் பாதிக்கப்படுவது பாதசாரிகளும், சாலை போக்குவரத்தும் தான்.
பாதசாரிகள் உரிமையுடன் நடைபாதையில் நடந்து செல்ல முடியாத நிலை தான் மும்பையில் இருக்கிறது.
ஆக்கிரமிப்புகளால் நடைபாதையை விட்டு சாலையில் நடந்து செல்லும் அவலம் தான் பெரும்பாலான சாலைகளில் உள்ளது.
போக்குவரத்து நெரிசல்சாலைகளில் பொதுமக்கள் வருகையால் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் எதிரொலியாக அலுவலகங்களில் பணிபுரிவோர் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் படாதபாடு படுகிறார்கள்.
அவசர காலத்தில் மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்களும் நெரிசலில் சிக்கும் அவலமும் நிகழ்கிறது.
உதாரணத்திற்கு தாதர் மேற்கு ரெயில் நிலையத்தையொட்டி உள்ள ரானடே சாலையை கூறலாம். இந்த சாலையின் இருபுற நடைபாதைகளும் காலை முதல் இரவு வரையிலும் நடைபாதை வியாபாரிகளின் கட்டுப்பாட்டிலேயே தான் இருக்கிறது. இதனால் ரெயில் நிலையத்திற்கு வருபவர்களும், செல்பவர்களும் சாலையில் தான் நடந்து செல்கிறார்கள்.
விழிபிதுங்கும் வாகன ஓட்டிகள்ஒரு வழி பாதை என்பதால் இந்த சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை குறைவு தான். இருப்பினும் இந்த சாலை வழியாக விழிபிதுங்கியபடி தான் செல்லவேண்டும்.
அதிலும் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற திருவிழா காலங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். சாலையே தெரியாத அளவிற்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். மேலும் நடைபாதை கடைகள் எண்ண முடியாத அளவிற்கு பெருகி இருக்கும். அந்த நேரங்களில் திக்கி, திணறி தான் பொதுமக்கள் அந்த வழியாக செல்ல முடியும்.
வாகனங்களால் ஆமை வேகத்தில் தான் செல்ல முடியும்.
சாலைகளின் அளவு குறைகிறதுபெருமழைக்கு பயந்து மட்டுமே நடைபாதை வியாபாரிகள் தங்கள் தொழிலுக்கு விடுமுறை விட்டுக் கொள்வார்கள். மற்றபடி எதற்கும் அஞ்ச மாட்டார்கள். சாதாரணமாக மழை பெய்து கொண்டிருந்தாலும் நனைந்து விடாமல் இருப்பதற்ககக தங்களது வியாபார பொருட்கள் மீது பாலித்தீன் கவர்களை விரித்து வைத்து வியாபாரத்தை கவனித்து விடுவார்கள்.
ஆக்கிரமிப்பு செய்யும் நடைபாதை வியாபாரிகளுக்கு எதிராக மாநகராட்சி அதிகாரிகள் என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் மும்பையில் சட்டவிரோத நடைபாதை வியாபாரம் என்பது ஒழிக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. மாநகராட்சியின் ஆக்கிரமிப்பு அகற்றும் வாகனத்தை பார்த்ததும் தங்களது வியாபார பொருட்களை மின்னல் வேகத்தில் அள்ளிக்கொண்டு ஓடுபவர்கள், அந்த வாகனம் சென்றதும் மீண்டும் ஆக்கிரமித்து கொள்வார்கள்.
சாலையோரங்களில் உள்ள கடைகளை சேர்ந்த உரிமையாளர்கள் நடைபாதை வியாபாரிகளிடம் பணம் வாங்கி கொண்டு அவர்களுக்கு தங்கள் கடை எதிரில் நடைபாதையில் வியாபாரம் செய்து கொள்வதற்கு அனுமதிக்கிறார்கள்.
இதனால் தான் நடைபாதைகள் அனைத்தும் வியாபார தலமாக மாறி வருகிறது. மக்கள் நடைபாதையை விட்டு சாலைக்கு செல்வதால் சாலையின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. மக்களோடு, மக்களாக சாலைகளில் வாகனங்கள் செல்கின்றன.
விபத்துகள்இது சாலை விபத்திற்கு வித்திட்டு விடுகிறது. மும்பையில் கடந்த ஆண்டில் மட்டும் 562 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்து இருக்கிறார்கள்.
இவர்களில் நடைபாதையில் செல்ல முடியாமல் சாலையில் நடந்து சென்றவர்களும் அடங்குவார்கள். சாலை விபத்துகளை தடுப்பதற்கு சாலைகளில் வாகனங்கள் செல்ல இடவசதி வேண்டும். பாதசாரிகள் நடைபாதைகளை பயன்படுத்த வேண்டும். அதற்கு நடைபாதை வியாபாரிகள் அகற்றப்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் நோக்கமாக இருக்கிறது.
மும்பையில் நடைபாதையை ஆக்கிரமிப்பவர்களுக்கு எதிராக தற்போது மாநகராட்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் போதாது. அதிரடியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வழுத்து வருகிறது.
வழக்கமான பதில்சுற்றுலா பகுதிகளாக விளங்கும் சி.எஸ்.டி., சர்ச்கேட், பாட்டியா பாக் உள்ளிட்ட இடங்களில் நடைபாதைகள் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு குறுகலாக உள்ளன. இந்த நடைபதைகளில் நடைபாதை வியாபாரிகளின் ஆக்கிரமிப்பு இல்லை என்றாலும் கூட பாதசாரிகளுக்கு இந்த நடைபாதைகளில் செல்வது என்பது சிரமமாகவே இருக்கிறது.
இந்த இடங்களில் பெரும்பாலும் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு சாலையை தான் பயன்படுத்துகிறார்கள். இந்த இடங்களில் நடைபாதைகளை விஸ்தரித்து அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது.
இதுபற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மும்பையில் நடைபாதை வியாபாரிகளுக்கு எதிராக மாநகராட்சி கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வருகிறது. நடைபாதைகளில் விற்பனைக்கு வைத்திருக்கும் பொருட்களை கைப்பற்றி அபராதம் விதிக்கப்படுகிறது. 40 இடங்களில் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு குறுகலாக இருக்கும் நடைபாதைகள் மழைக்காலம் முடிந்ததும் விஸ்தரித்து அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது’’ என்றார்.