வாளிக்குள் பச்சிளம் பெண் குழந்தை பிணம்: கள்ளக்காதலில் பிறந்ததால் கொன்று வீசப்பட்டதா?

நாகர்கோவில் பகுதியில் இரட்டை பச்சிளம் பெண் குழந்தைகளை பெற்ற தாயே மூச்சை திணறடித்து கொன்ற பரபரப்பு அடங்குவதற்குள் நேற்றுமுன்தினம் பச்சிளம் பெண் குழந்தை பிணமாக கிடந்த மற்றொரு சம்பவம் புதுக்கடை பகுதியில் நடந்துள்ளது.

Update: 2017-06-11 23:15 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டம் புதுக்கடை அருகே பைங்குளம் வழுதமடம் பகுதியில் ஒரு திருமண மண்டபம் உள்ளது. அதன் அருகே கழிவுப் பொருட்கள் கொட்டப்படும் இடத்தில் நேற்றுமுன்தினம் இரவு 9 மணி அளவில் ஒரு பெரிய வாளி மூடி வைக்கப்பட்ட நிலையில் கேட்பாரற்று கிடந்தது.

அந்த வழியாகச் சென்றவர்கள் இதை கவனித்து அருகில் சென்று அந்த மூடிய வாளியை திறந்து பார்த்தனர். அங்கு வாளியின் உள்ளே ஒரு பச்சிளம் பெண் குழந்தையின் உடல் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருந்தது. இதனை பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தை அழுகிய நிலையில் இருந்ததால் குழந்தை இறந்து சில நாட்கள் ஆகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கள்ளக்காதலில் பிறந்ததா?

இதுபற்றி தகவல் அறிந்த புதுக்கடை போலீசார் விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த குழந்தை யாருடையது? குழந்தையின் தாய் யார்? என்பதை அறிய போலீசார் விசாரணை நடத்தினாலும் உடனடியாக அதுகுறித்து தகவல் எதுவும் தெரியவரவில்லை.

கள்ளக்காதலில் பிறந்ததால் பச்சிளம் குழந்தையை பெற்ற தாயே கொன்று வாளிக்குள் வைத்து வீசினாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என்று புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்