13 இடங்களில் கழிவுநீர் கலப்பதால் கழிவுநீர் வடிகாலாக மாறிய வடவாறு

13 இடங்களில் கழிவுநீர் கலப்பதால் கழிவுநீர் வடிகாலாக வடவாறு மாறியுள்ளது.

Update: 2017-06-11 22:45 GMT
தஞ்சாவூர்,

மேட்டூர் அணையில் இருந்து காவிரில் திறந்து விடப்படும் தண்ணீர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணைக்கு வந்தவுடன் டெல்டா பகுதி பாசனத்திற்காக காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், புதுஆறு எனப்படும் கல்லணை கால்வாய் ஆகிய ஆறுகளில் தண்ணீர் பிரித்து விடப்படும். தஞ்சையை அடுத்த தென்பெரம்பூரில் வெண்ணாற்றில் இருந்து வடவாறு பிரிந்து செல்கிறது. இந்த வடவாறு தஞ்சை கரந்தை வழியாக செல்கிறது. இந்த ஆறு மூலம் தஞ்சை மாவட்டத்தில் 72 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

வடகிழக்குப்பருவமழை பொய்த்ததால் காவிரி டெல்டா மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் ஆறுகள், ஏரி, குளங்கள் வறண்டு காட்சி அளிக்கிறது. வடவாற்றிலும் தண்ணீர் இல்லை. ஆனால் ஆறுகளில் கழிவுநீர் விடப்படுகிறது. பிளாஸ்டிக் கப் மற்றும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளும் கொட்டப்படுகிறது.

இதனால் வடவாறு கழிவுநீர் வடிகாலாக மாறி காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக துர்நாற்றம் வீசுவதுடன் நோய் கிருமி உருவாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆகாயத்தாமரை வளர்ந்து காணப்படுகிறது.

கருத்து

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

வடவாற்றில் 13 இடங்களில் கழிவு நீர் கலக்கிறது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் இன்றைக்கு வடவாறு கழிவுநீர் வடிகாலாக மாறியுள்ளது. குப்பைகளை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து கொட்டிவிட்டு செல்கிறார்கள். இதை தடுக்க உரிய முயற்சி மேற்கொள்வதுடன் ஆகாய தாமரையை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும். மழைகாலத்தில் தண்ணீர் வந்தால் கழிவுநீரும் அவற்றுடன் சேர்ந்து பாசன நிலங்களுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. குப்பைகள் பாசன நிலங்களில் தேங்கினால் பயிர் விளைச்சல் பாதிக்கப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்