காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மாற்றம் குறித்து மேலிடத்தில் புகார் செய்யப்படும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி

காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மாற்றம் குறித்து மேலிடத்தில் புகார் செய்யப்படும் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

Update: 2017-06-11 22:45 GMT
புதுக்கோட்டை,

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஒப்புதலின்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பட்டியலில் பல குளறுபடிகள் உள்ளன. குறிப்பாக திறம்பட செயல்பட்டு வந்த மாவட்ட தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மேலிடத்தில் புகார் செய்யப்படும். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருடன் கருத்து வேறுபாடு இருப்பது உண்மை தான். ஆனால் மோதல் போக்கை கடைபிடிக்க மாட்டேன்.

ராஜினாமா

தமிழக அரசு நிர்வாகம் முற்றிலும் மோசமாக நடந்து வருகிறது. ஜெயலலிதா இருந்த போது நடந்த அரசை விட மோசமாக தற்போதைய அரசு நடந்து வருகிறது. எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்கவில்லை என்றால் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். உடனடியாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தால் நல்லது.

புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த 3 தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டுள்ளது அராஜகத்தின் உச்சகட்டம். அ.தி.மு.க. தற்போது 3 அணிகளாக உள்ளது. சிறிது காலத்தில் இது 5 அல்லது 6 அணிகளாக கூட மாறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்