மதுக்கடையை அடித்து நொறுக்கிய பொதுமக்கள் விற்பனையாளர்களை விரட்டியடித்ததால் பரபரப்பு

கும்பகோணம் அருகே புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. அப்போது மதுக்கடையை அடித்து நொறுக்கிய பொதுமக்கள், கடையில் பணியாற்றிய விற்பனையாளர்களை விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2017-06-11 22:45 GMT
திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில் எதிரே இயங்கி வந்த மதுக்கடை பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக கடந்த மாதம் மூடப்பட்டது. இந்த கடைக்கு மாற்றாக நாச்சியார்கோவில் தண்டந்தோட்டம் புது ரோட்டில் அரசலாறு பாலம் பகுதியில் புதிய மதுக்கடை திறக்க டாஸ்மாக் முடிவு செய்தது. அதன்படி அங்கு தகர ஷீட்டுகளால் கொட்டகை அமைத்து மதுக்கடை அமைக்கப்பட்டது. இந்த மதுக்கடை நேற்று திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. இதை அறிந்த திருப்பந்துறை, சமத்தனார்குடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விரட்டியடிப்பு

அப்போது பொதுமக்கள், மதுக்கடையை அடித்து நொறுக்கினர். இதில் தகர ஷீட்டுகளால் அமைக்கப்பட்ட கொட்டகை பிரித்தெடுக்கப்பட்டது. மதுக்கடையில் பணியாற்றிய விற்பனையாளர்கள் 4 பேரையும் பொதுமக்கள் விரட்டியடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் தாசில்தார் கார்த்திகேயன், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மதுக்கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் உறுதி அளித்தார். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனிடையே மதுக்கடையில் இருந்த மதுபாட்டில்களை டாஸ்மாக் ஊழியர்கள் வேன் மூலம் எடுத்து சென்றனர்.

மேலும் செய்திகள்