‘பணம் இல்லை’ என்ற போர்டு மட்டுமே உள்ளது: காட்சிப் பொருளாக இருக்கும் ஏ.டி.எம். மையங்கள்

சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் செயல்படாமல் காட்சிப் பொருளாகவே உள்ளன. இதனால் பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதியடைகின்றனர்.

Update: 2017-06-11 21:12 GMT
காளையார்கோவில்,

சிவகங்கை மாவட்டத்தில் சமீப காலமாக ஏ.டி.எம். மையங்களில் பணம் இருப்பதில்லை. இதனால் அங்கு பணம் எடுக்க செல்லும் வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைகின்றனர். மாவட்டத்தில் முக்கிய இடங்களாக காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர், தேவகோட்டை ஆகிய நகரங்கள் உள்ளன. இவ்விடங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. ஆனால் இவற்றில் 75 சதவீத ஏ.டி.எம். மையங்கள் வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளன. மேலும் இந்த ஏ.டி.எம். மையங்களின் முன்பு பணம் இல்லை என்ற போர்டு மட்டுமே உள்ளது.

காட்சிப் பொருளானது

காரைக்குடி நகரை பொறுத்தவரை சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள செட்டிநாடு கட்டிட கலை நயங்களை பார்வையிட தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பணம் எடுக்க ஏ.டி.எம். மையங்களையே நம்பியுள்ளனர். இதேபோல் காரைக்குடி சுற்றுலா தலமாக மட்டுமின்றி வணிக நகரமாகவும் விளங்குவதால் பெரும்பாலான வியாபாரிகள், வணிக நிறுவனத்தினர் பணம் பரிவர்த்தனைக்கு ஏ.டி.எம். மையங்களையே பயன் படுத்தி வருகின்றனர். ஆனால் நகரில் உள்ள ஏ.டி.எம். மையங்கள் செயல்படாமல் கிடக்கின்றன. இதேபோல் தேவகோட்டை, சிவகங்கை நகரங்களிலும் இதே நிலையே நீடிக்கிறது.

நகர்ப்புறங்களில் தான் இந்த நிலைமை என்றால் அங்கும், இங்குமாக கிராமப்புறங்களில், அதுவும் முக்கிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள ஏ.டி.எம். மையங்களும் செயல்படாமல் காட்சிப் பொருளாகவே உள்ளன.

கோரிக்கை

சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை முழுக்க, முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளது. இதனால் இங்கு விவசாயிகளே ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களது பணத்தை வங்கிகளிலேயே பரிவர்த்தனை செய்து வருகின்றனர். ஆனால் தங்களது அவசர தேவைக்கு பணம் எடுப்பதற்கு ஏ.டி.எம். மையம் சென்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அதுவும் கிராமப்புறங்களில் வசிக்கும் விவசாயிகள் சுமார் 10 முதல் 20 கி.மீ. தூரம் சென்று ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க செல்கின்றனர். ஆனால் அங்கு சென்றும் பணம் எடுக்க முடியாமல் போகும்போது பெரிதும் அவதியடைகின்றனர். விவசாயிகள் மட்டுமின்றி கூலித்தொழிலாளர்கள் முதல் அரசு ஊழியர்கள், தொழில் அதிபர்கள் வரை ஏ.டி.எம். மையம் செயல்படாததால் திண்டாடுகின்றனர். எனவே மாவட்டத்தில் செயல்பாடின்றி உள்ள ஏ.டி.எம். மையங்களை செயல்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பணம் எடுக்க சிரமம்

இதுகுறித்து காளையார்கோவிலை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் கூறியதாவது:- காளையார்கோவிலில் அரசுடமை வங்கி கிளை உள்ளது. இங்கு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த வங்கியின் ஏ.டி.எம். மையம் தனியார் கல்லூரி வளாகத்திலும், மற்றொன்று பஸ் நிலையத்திலும் செயல்படுகிறது. கல்லூரி வளாகத்தில் செயல்பட்ட ஏ.டி.எம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதேபோல் பஸ் நிலைய பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையமும் கடந்த 2 மாதமாக செயல்படாமல் உள்ளது. இதேபோன்று மற்ற வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களும் செயல்படாமலேயே உள்ளன. இதனால் காளையார்கோவில் நகர் மக்கள் பணம் எடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் ஏ.டி.எம். மையங்கள் செயல்படாததால் வங்கிகளில் பணம் எடுக்க கூட்டம் அலைமோதுகிறது. இதனால் வேறு ஊர்களில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க அதிக தூரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே செயல்படாமல் உள்ள ஏ.டி.எம். மையங்களை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்