வக்கீல்களுக்கு பொறுப்புகள் அதிகரித்து வருகின்றன நீதிபதி பேச்சு

வக்கீல்களுக்கு பொறுப்புகள் அதிகரித்து வருகின்றன என்று மதுரை அரசு சட்டக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி என்.சேஷசாயி பேசினார்.

Update: 2017-06-11 22:30 GMT
மதுரை,

மதுரை அரசு சட்டக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி என்.சேஷசாயி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் நீதி வழங்குவதில் தனக்கென்று ஒரு மரபை கடைபிடித்தார். அவரை வக்கீல்கள் முன்மாதிரியாக எடுத்து செயல்பட்டால் வாழ்வில் வெற்றி பெறலாம். சாதனையாளர்கள் யாரும் குறுக்கு வழியை நாடியதில்லை, அவ்வாறு நாடியவர்கள் வெற்றி பெற்றதும் இல்லை.

வக்கீல் தொழிலுக்கு நம்பகத்தன்மை மிகவும் அவசியம். நம்பகத்தன்மையை பெறுவதை விட அதை தக்கவைப்பது தான் கடினமானது. வக்கீல் என்ற பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு அனைவரும் கண்ணியமான, மனிதநேயம் மிக்க மனிதனாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அமைதியை நிலைநாட்டுவதற்கான தூதுவர்கள் தான் வக்கீல்கள். அதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

பொறுப்பு அதிரிக்கிறது

தற்போதுள்ள வக்கீல்களுக்கு பொறுப்புகள் அதிகரித்து உள்ளன. இதனால் நீதிமன்ற புறக்கணிப்பு என்ற ஒரு வழக்கம் இனி வரப்போவதில்லை. தமிழ் மொழியை கற்ற அனைவருக்குமே தமிழர் என்ற கர்வம் இருப்பது இயல்பு. அதற்காக மற்ற மொழிகள் மீது வெறுப்பை சிந்துவதில் அர்த்தம் இல்லை. ஒவ்வொரு மொழியும் அதன் வடிவத்தில் தனிச்சிறப்பை பெற்றிருக்கும். வக்கீல்களுக்கு மொழி அறிவு மிகவும் அவசியம். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழித் திறனையும் நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பட்டமளிப்பு விழாவில் 11 பேர் எம்.எல். பட்டமும், 300 பேர் பி.ஏ.பி.எல். பட்டமும், 257 பேர் பி.ஏ., எல்.எல்.பி. பட்டமும் பெற்றனர்.

விழாவில் சட்டக்கல்வித்துறை இயக்குனர் சந்தோஷ்குமார், கல்லூரி முதல்வர் மனோகரன், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக ஆட்சி மன்ற உறுப்பினர் குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்