கள்ளக்காதல் விவகாரத்தில் டிரைவர் கொலை வழக்கில் ராசிக்கல் வியாபாரி உள்பட 4 பேர் கைது

கள்ளக்காதல் விவகாரத்தில் டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ராசிக்கல் வியாபாரி உள்பட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-06-11 23:15 GMT
திருச்சி,

திருச்சி காவிரி ஆற்றில் உள்ள பழைய பாலத்தின் 8 மற்றும் 9-வது தூண்களுக்கு இடையே கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 21-ந் தேதி காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடலில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில், ஸ்ரீரங்கம் போலீஸ் சரக உதவி கமிஷனர் ஸ்ரீதர் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இறந்தவர் திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா கோவண்டகுறிச்சி வடக்கு தெருவை சேர்ந்த செந்தில்குமார்(வயது 39) என்பதும், பால்வேன் டிரைவர் என்பதும் தெரியவந்தது.

கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை

இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் திருவானைக்காவல் நெல்சன்ரோடு சக்திநகரை சேர்ந்த ராஜவேலு(46), அவருடைய அண்ணன் மகனான ஸ்ரீரங்கம் சங்கர் நகர் மங்கம்மா நகர் வளைவை சேர்ந்த நவீன்குமார்(30) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில், ராஜவேலு வைத்தியம் செய்வது, ராசி கற்கள் வியாபாரம் செய்வது மற்றும் குறி சொல்லும் தொழில்களை செய்து வந்துள்ளார். அவர், நவநீதம்(38) என்கிற பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் செந்தில்குமார், ராஜவேலு வீட்டில் அவ்வப்போது தங்கியிருந்தார். அப்போது நவநீதத்திற்கும், செந்தில்குமாருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக தனது நண்பரான லால்குடி தாலுகா பள்ளிவிடை மாடக்குடி ஈஸ்வரன் நகரை சேர்ந்த அழகர்சாமி(51) மூலம் ராஜவேலு தெரிந்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜவேலு தனது அண்ணன் மகனான நவீன்குமார் மற்றும் அழகர்சாமி, வடக்கு காட்டூரை சேர்ந்த பிருத்திவிராஜ்(36) ஆகியோருடன் சேர்ந்து செந்தில்குமாரை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

சம்பவத்திற்கு முந்தைய நாள் மாலையில் திருச்சி நொச்சியத்தில் இருந்த செந்தில்குமாரிடம், ராஜவேலு தன்னிடம் உள்ள பழங்கால செம்பு ஒன்றை தருவதாகவும், அதனை நல்ல விலைக்கு விற்கலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். பின்னர் செந்தில்குமாரை, ராஜவேலு காவிரி ஆற்றின் வடகரையில் உள்ள கம்பரசம்பேட்டை தடுப்பணை அருகே அழைத்து வந்துள்ளார். பின்னர் ராஜவேலு, நவீன்குமார், அழகர்சாமி, பிருத்திவிராஜ் ஆகிய 4 பேரும் சேர்ந்து செந்தில்குமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்து ஆற்றில் தள்ளிவிட்டது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து ராஜவேலு உள்பட 4 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்