அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக தி.மு.க. தொடர்ந்து போராட்டம் நடத்தும் மு.க.ஸ்டாலின் பேச்சு

இன்றோ நாளையோ கவிழும் நிலையில் உள்ள அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக தி.மு.க. தொடர்ந்து போராட்டம் நடத்தும் என்று புதுக்கோட்டையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Update: 2017-06-11 23:15 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொள்ள சென்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரகுபதி, பெரியண்ணன் அரசு, மெய்யநாதன் மற்றும் நிர்வாகிகள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டனர். அரசு விழாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை பங்கேற்க விடாமல் தடுத்து, கைது செய்த போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

இந்த அறிவிப்பின்படி புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க. கொண்டு வந்தது

புதுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டு உள்ள அரசு மருத்துவக்கல்லூரி கடந்த 2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாகும். அதன்பிறகு நடந்த ஆட்சி மாற்றத்தினால் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் அந்த பெயர் தி.மு.க.விற்கு போய்விடும் என்பதற்காக அ.தி.மு.க. இந்த திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டது.

பின்னர் அ.தி.மு.க. ஆட்சி நிறைவுபெறும் நேரத்தில் மீண்டும் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி அறிவிப்பை சட்டமன்றத்தில் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்தார். இந்த திட்டத்திற்காக தி.மு.க. அரசு சார்பில் நிதி ஒதுக்கி இதற்கான அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறோம் என அப்போது சட்டமன்றத்தில் தி.மு.க. சார்பில் பேசி இருக்கிறோம்.

அச்சம்

தமிழகத்தில் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டு உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியது நோயாளிகள் இல்லை. ஆட்சியாளர்கள் தான். இந்த அரசு மருத்துவக்கல்லூரியை கட்டிய ஒப்பந்ததாரர் சுப்பிரமணி என்ன ஆனார். அவருடன் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு என்ன தொடர்பு?. இதை எல்லாம் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் விழாவில் பேசி விடுவார்கள் என்ற அச்சம் காரணமாக தான் அவர்களை கைது செய்து இருக்கிறார்கள்.

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் முதல்-அமைச்சர் கலந்து கொள்ளும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் அனைவரையும், அவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அழைத்து விழாவில் கலந்துகொள்ள வைக்கும் நிகழ்வு நடைபெறும். ஆனால் இந்த அ.தி.மு.க. ஆட்சியில் அதுபோன்ற நிகழ்வு இல்லை.

வழக்குப்பதிவு

ஆர்ப்பாட்டம் நடத்த முறையாக அனுமதி வாங்குங்கள் என எம்.எல்.ஏ.க்கள் ரகுபதி, பெரியண்ணன் அரசு, மெய்யநாதன் ஆகியோரிடம் நான் தெரிவித்தேன். அவர்கள் அனுமதி கேட்டு கொடுத்த கடிதத்தை பெற்றுக்கொண்ட காவல்துறை அனுமதி உண்டு அல்லது இல்லை என சொல்லவில்லை.

இதைத்தொடர்ந்து, நான் மதுரை நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி கேளுங்கள் என சொல்லி, அதற்கு பிறகு நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுதான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை கைது செய்தது மட்டுமல்லாமல் அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

ஆட்சி கவிழும்

இதுகுறித்து போலீசார் விளக்கம் அளிக்கவில்லை என்றால், இந்த வழக்கை நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லும்போது, இந்த வழக்கை பதிவு செய்த அதிகாரிகள் அங்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். இந்த ஆட்சி இன்றோ அல்லது நாளையோ? அல்லது நாளை மறுநாளோ? அல்லது இந்த ஆர்ப்பாட்டம் முடிவதற்கு உள்ளேயே கவிழ்ந்து விடும் வாய்ப்பு உள்ளது.

ஆட்சியை கவிழ்க்கும் நோக்கம் நமக்கு இல்லை. தவறை சுட்டிக்காட்டுவது நமது கடைமையாகும். தி.மு.க. ஆட்சி அமையும்போது எம்.எல்.ஏ.க்களை கைது செய்து, வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் கண்டிப்பாக பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

தொடர்ந்து போராட்டம்

டெல்லியில் விவசாயிகள் எலிக்கறி, பாம்புக்கறி சாப்பிடும் போராட்டம், முழு நிர்வாண போராட்டம் உள்பட பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் பிரதமரை சந்திக்க அனுமதி வழங்கவில்லை. சென்னை கோட்டைக்கு முன்பு நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து அய்யாக்கண்ணுவை அழைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறார்.

அப்போது மத்திய மந்திரி வெங்கையாநாயுடு, விவசாயிகள் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய முடியாது. அது மாநில அரசு விவகாரம் என்று கூறியதை எடுத்து சொல்லி உள்ளனர். ஆனால் அதற்கு முதல்-அமைச்சர் சிரித்துக்கொண்டே இதற்கு நான் ஒன்றும் சொல்ல முடியாது என கூறி உள்ளார். இந்த ஆட்சியின் அக்கிரமங்களை வெளிப்படுத்த இந்த ஆர்ப்பாட்டம் முதல் தடவைதான். ஜனநாயகத்தை காப்பாற்ற தொடர்ந்து தி.மு.க. போராடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்