பெரம்பலூர் மாவட்டங்களில் நடந்த நான்காம் நிலை செயல் அலுவலர்களுக்கான தேர்வை எழுதினர்

பெரம்பலூர் மாவட்டங்களில் நடந்த நான்காம் நிலை செயல் அலுவலர்களுக்கான தேர்வை 736 பேர் எழுதினர்.

Update: 2017-06-11 22:45 GMT
பெரம்பலூர்,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் நடந்த குரூப்-7 பி-யில் அடங்கிய மூன்றாம் நிலை செயல் அலுவலர் பதவிக்கான தேர்வினை 560 பேர் எழுதினர். அதனை தொடர்ந்து நேற்று குரூப் 8-ல் அடங்கிய நான்காம் நிலை செயல் அலுவலர் பதவிக்கான தேர்வு நடந்தது. இந்த தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பித்தவர்களில் அரியலூர் மாவட்டத்தில் 718 பேருக்கு தேர்வுக்கூட நுழைவு சீட்டு அனுப்பப்பட்டது.

அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற நான்காம் நிலை செயல் அலுவலருக்கான தேர்வில் 358 பேர் பங்கேற்று தேர்வெழுதினர். 360 பேர் தேர்வெழுத வரவில்லை. தேர்வினை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) தனசேகரன் பார்வையிட்டார். உடன் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்ட வட்டாட்சியர் குமரய்யா இருந்தார். காலை முதல் தாள் தேர்வும், மாலை இரண்டாம் தாள் தேர்வும் என இருவேளையும் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் முறைகேடுகள் நடப்பதை தடுக்கும் வண்ணம் பறக்கும் படை மற்றும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கான குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

பெரம்பலூர் மாவட்டத்திலும்...

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் குரூப் 8-ல் அடங்கிய நான்காம் நிலை செயல் அலுவலர் பதவிக்கான தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் 853 பேருக்கு தேர்வுக்கூட நுழைவு சீட்டு அனுப்பப்பட்டது. பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்த தேர்வில் 378 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 475 பேர் தேர்வு எழுத வரவில்லை. மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன், வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன் ஆகியோர் தேர்வு மையத்தை நேரில் பார்வையிட்டு தேர்வு குறித்த நேரத்தில் தொடங்கி விட்டதா? என்பது உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர். தேர்வு பொறுப்பாளராக சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சிவக்குமார் செயல்பட்டார்.

736 பேர் எழுதினர்

மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பாண்டியன், பறக்கும் படை அலுவலராக நியமிக்கப்பட்டு தேர்வு மையத்தை சுற்றி வந்து தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். இதில் காலையில் முதல் தாளினை எழுதிய 18 பேர், மதியம் நடந்த 2-ம் தாளை எழுதாமல் வீட்டிற்கு சென்று விட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் முதல் மற்றும் 2-ம் தாள் ஆகிய இரண்டையும் எழுதியவர்களே தேர்வு எழுதியவர்களாக கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டனர். தேர்வு மையத்திற்கு எளிதில் சென்று வரும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நான்காம் நிலை செயல் அலுவலருக்கான தேர்வினை மொத்தம் 736 பேர் எழுதியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்