மகாத்மா காந்தியை பற்றி பேச அமித்ஷாவுக்கு தகுதி இல்லை சித்தராமையா பேட்டி

மகாத்மா காந்தியை பற்றி பேச அமித்ஷாவுக்கு தகுதி இல்லை என்று சித்தராமையா கூறினார்.

Update: 2017-06-11 21:00 GMT

பெங்களூரு

மகாத்மா காந்தியை பற்றி பேச அமித்ஷாவுக்கு தகுதி இல்லை என்று சித்தராமையா கூறினார்.

முதல்–மந்திரி சித்தராமையா நேற்று உப்பள்ளியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

அமித்ஷாவுக்கு தகுதி இல்லை

நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தவர் மகாத்மா காந்தி. அவரை பற்றி பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா தவறாக பேசியது சரியல்ல. ஒட்டுமொத்த நாடே அவரை மகாத்மா என்று ஒப்புக்கொண்டுள்ளது. காந்தியை பற்றி தவறான பேசியதன் மூலம் அமித்ஷாவின் மனநிலை என்ன என்று தெரிந்துள்ளது. மகாத்மா காந்தியை அவமானப்படுத்தும் நோக்கத்தில் அமித்ஷா பேசியுள்ளார்.

அவரை பற்றி பேச அமித்ஷாவுக்கு தகுதி இல்லை. அவருடைய பேச்சு கண்டிக்கத்தக்கது ஆகும். பசுவதை தடை சட்டம் தொடர்பான விவகாரம் மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. வயதான மாடுகளை கொல்ல நமது சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வயதான மாடுகளை யார் பராமரிப்பார்கள்?.

எந்த தடையும் விதிக்க முடியாது

உணவு பழக்கம் என்பது அவரவர்களின் தனிப்பட்ட உரிமை. இது மாநிலத்தின் கொள்கை. உணவு பழக்க வழக்கத்தின் மீது யாரும் எந்த தடையும் விதிக்க முடியாது. கலசா–பண்டூரி குடிநீர் திட்டம், கோலார், சிக்பள்ளாப்பூர் பகுதிகளுக்கு நீர்ப்பாசன திட்டத்தை அமல்படுத்தக் கோரி கன்னட சங்கங்கள் நாளை(அதாவது இன்று) முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த முழு அடைப்பு வெற்றி பெறாது.

கர்நாடக மேல்–சபை தலைவர் பதவி குறித்து நீங்கள் கேட்கிறீர்கள். அந்த பதவி தற்போது காலியாக இல்லை. அதனால் அதுபற்றி நான் கருத்து எதுவும் சொல்ல மாட்டேன். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா நில முறைகேடு செய்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை. இந்த குற்றச்சாட்டை கூறியவர்கள் அதற்குரிய ஆவணங்களை வெளியிட வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்