பஸ்கள்–ஆட்டோக்கள் ஓடாது என தகவல் கர்நாடகத்தில் இன்று திட்டமிட்டப்படி முழு அடைப்பு வாட்டாள் நாகராஜ் பேட்டி

கர்நாடகத்தில் இன்று(திங்கட்கிழமை) திட்டமிட்டப்படி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறினார்.

Update: 2017-06-11 20:30 GMT

பெங்களூரு,

கர்நாடகத்தில் இன்று(திங்கட்கிழமை) திட்டமிட்டப்படி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறினார். இதனால் பஸ்கள், ஆட்டோக்கள் ஓடாது என்று கூறப்படுகிறது.

இன்று முழு அடைப்பு

கலசா–பண்டூரி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட வேண்டும், வறண்ட பிரதேசங்கள் என்று சொல்லப்படும், கோலார், சிக்பள்ளாப்பூர், துமகூரு பகுதிகளுக்கு நிரந்தர நீர்ப்பாசன திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 12–ந் தேதி (அதாவது இன்று) கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் கடந்த மாதம் அறிவித்தார்.

இது தொடர்பாக அடிக்கடி கன்னட சங்கங்களின் நிர்வாகிகளுடன் அவர் கலந்து ஆலோசனை நடத்தி இதுபற்றி கருத்துகளை கூறி வந்தார். இந்த முழு அடைப்புக்கு கர்நாடக ரக்‌ஷன வேதிகே தலைவர் நாராயணகவுடா உள்பட சில கன்னட சங்கங்கள் ஆதரவு இல்லை என்று வெளிப்படையாக அறிவித்துள்ளன. இருந்தாலும், திட்டமிட்டப்படி இன்று(திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று வாட்டாள் நாகராஜ் அறிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து வாட்டாள் நாகராஜ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

மேகதாதுவில் புதிய அணை

கலசா–பண்டூரி பிரச்சினைக்காக வட கர்நாடக மக்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக மத்திய–மாநில அரசுகள் கூறின. இதை கூறி 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே போல் கோலார், சிக்பள்ளாப்பூர், துமகூரு உள்ளிட்ட பகுதிகள் வறண்ட பகுதிகள் ஆகும். அந்த பகுதிகளில் மழை குறைவாக தான் பெய்கிறது.

அதனால் அந்த பகுதிகளுக்கு நிரந்தர நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக போராடி வருகிறார்கள். மேலும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதாக அரசு கூறியுள்ளது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கர்நாடகத்தில் நாளை(இன்று) முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

வாகன போக்குவரத்தை தடுத்து நிறுத்துவோம்

காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை இந்த முழு அடைப்பு போராட்டம் நடைபெறும். இதையொட்டி காலை 10 மணிக்கு டவுன் ஹாலில் இருந்து ஊர்வலமாக சென்று விதான சவுதாவை முற்றுகையிடுகிறோம். நாங்கள் நடத்தும் இந்த முழு அடைப்புக்கு பெரும்பாலான கன்னட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஆம்புலன்ஸ் வாகனங்கள், மருந்து கடைகள், ஆஸ்பத்திரிகள், பால் விற்பனை மையங்கள் போன்றவை வழக்கம் போல் செயல்படும். இதற்கு நாங்கள் விலக்கு அளித்துள்ளோம். பஸ், ஆட்டோக்கள் போக்குவரத்தை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் அந்த வாகன போக்குவரத்தை தடுத்து போராட்டம் நடத்துவோம். ஓட்டல்களை மூட வேண்டும். இந்த முழு அடைப்புக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு வழங்க வேண்டும். முழு அடைப்பு நடைபெறுவது உறுதி. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

இவ்வாறு வாட்டாள் நாகராஜ் கூறினார்.

திரையரங்குகள் மூடப்படும்

இதுபற்றி கன்னட சினிமா வர்த்தக சபை தலைவர் சா.ரா.கோவிந்து கூறுகையில், “இந்த முழு அடைப்புக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். இதனால் திரையரங்குகள் மூடப்படும். சினிமா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. யாரும் கட்டாயப்படுத்தவில்லை. நாங்களாகவே இந்த ஆதரவை வழங்குகிறோம்“ என்றார்.

பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக (பி.எம்.டி.சி.) தலைவர் நாகராஜ் கூறுகையில், “பெங்களூருவில் இன்று மாநகர அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கும். இருந்தாலும் நிலைமையை பொறுத்து உரிய முடிவு எடுக்கப்படும். அரசு பஸ்களுக்கு எந்த சேதமும் ஏற்படக்கூடாது. தண்ணீர் உள்பட மாநில பிரச்சினைகளுக்கு எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை“ என்றார். அதேவேளையில், கர்நாடக அரசு போக்குவரத்து கழக (கே.எஸ்.ஆர்.டி.சி.) பஸ்களும் வழக்கம் போல் தனது சேவையை தொடர்ந்து வழங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

முழு அடைப்புக்கு எதிர்ப்பு

ஆனால் கே.எஸ்.ஆர்.டி.சி. ஊழியர்கள் கூட்டமைப்பு இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் நாளை (இன்று) பணிக்கு செல்வதை புறக்கணிக்க வேண்டும் என்று அந்த கூட்டமைப்பின் செயலாளர் ஆனந்த் கூறியுள்ளார்.

அதேப் போல் மெட்ரோ ரெயில் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அதன் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளி–கல்லூரிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், ஓட்டல்களும் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே முழு அடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சில கன்னட சங்கங்கள் பெங்களூரு டவுன் ஹாலில் நேற்று போராட்டம் நடத்தின.போராட்டம் நடத்தியவர்கள் கூறும்போது, முழு அடைப்பு நடத்துவதால் நமது மாநிலத்திற்கு தான் இழப்பு ஏற்படுகிறது என்றும், அதே நேரத்தில் மாநில பிரச்சினைகளை தீர்க்குமாறு தொடர்ந்து போராடப்போவதாகவும் அவர்கள் கூறினர். இதனால் கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு நடைபெறுமா? என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க தேவையான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்