சென்னை சில்க்ஸ் கட்டிட இடிப்பு பணியில் சாவு: டிரைவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

சென்னை சில்க்ஸ் கட்டிட இடிப்பு பணியின் போது உயிரிழந்த ஜா கட்டர் டிரைவரின் உடலை வாங்க மறுத்து

Update: 2017-06-11 23:15 GMT
சென்னை,

அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை போலீசார் சமரசம் செய்து உடலை ஒப்படைத்தனர்.

தீ விபத்து

சென்னை தியாகராயநகரில் உள்ள தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் கடந்த 31-ந் தேதி அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை அணைக்கும் பணியில் 400-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 3 நாட்கள் போராடி தீயை அணைத்தனர். எனினும் மீண்டும் மீண்டும் அந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அணைக்கும் பணிகள் பாதிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கட்டிடத்தின் உறுதி தன்மை மிகவும் மோசமான நிலையில் இருந்ததாக நிபுணர்கள் தெரிவித்ததால் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்க தமிழக அரசு முடிவு செய்தது.

உடனே ஜா கட்டர் எந்திரத்தை கொண்டு இந்த கட்டிடத்தை இடிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலை யில் நேற்று முன்தினம் மாலை இடிபாடு கழிவுகள் மீது நின்று இடித்து கொண்டிருந்த ஜா கட்டர் எந்திரம் அதிர்வு காரணமாக சரிந்து கீழே விழுந்தது. இதில் அந்த ஜா கட்டர் எந்திரத்தை இயக்கிய டிரைவரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதி கொட்டுகாரன்பட்டியை சேர்ந்த சரத்குமார் (வயது 22) என்பவர் ஜா கட்டர் எந்திரத்தில் சிக்கினார்.

நிவாரணம்

உடனே தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சரத்குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே சரத்குமாரின் குடும்பத்தினருக்கு சென்னை சில்க்ஸ் நிறுவனம் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று சரத்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சிறிது நேரம் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே தகவல் அறிந்து வந்த போலீசார் சரத்குமாரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரின் உடலை ஒப்படைத்தனர். இதற்கிடையில் சரத்குமாரின் இறுதி சடங்கு செலவிற்காக அவர் வேலை பார்த்து வந்த நிறுவனம் சார்பில் ரூ.1 லட்சம் அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்