செங்குன்றம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் கொள்ளை

செங்குன்றம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து, 25 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2017-06-11 22:15 GMT

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏல்லம்மன்பேட்டை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீத்தாபதி.

இவர் அங்குள்ள சிப்காட்டில் தனியார் கம்பெனி ஒன்றில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உஷா (வயது 50). இவர் செங்குன்றத்தில் அரிசி மண்டி நடத்தி வருகிறார்.

இவர்களது மகன் கெஜபதி (30). இவரது மனைவி முனீஸ்வரி. கெஜபதி சொந்தமாக பிளாஸ்டிக் கம்பெனி நடத்தி வருகிறார். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். கீழ் தளத்தில் சீத்தாபதியும், உஷாவும், மாடி வீட்டில் கெஜபதியும், முனீஸ்வரியும் தங்கி இருக்கின்றனர்.

ரூ.50 ஆயிரம்

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சீத்தாபதி வேலைக்கு சென்றுவிட்டார். அதேபோல் உஷா சென்னை வானகரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் கீழ் வீடு பூட்டப்பட்டிருந்தது. கெஜபதியும், முனீஸ்வரியும் மாடி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர்.

நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் கீழ் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து அதில் இருந்த 25 பவுன் தங்க நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

வலை வீச்சு

நேற்று காலை சீத்தாபதி வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து சீத்தாபதி செங்குன்றம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் கொள்ளை நடந்த வீட்டில் இருந்து 100 மீட்டர் வரை ஓடி சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கை ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்