டி.என்.பாளையம் அருகே மேப்பராயன் சாமி கோவிலில் வேல்கம்பு நட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

டி.என்.பாளையம் அருகே மேப்பராயன் சாமி கோவிலில் வேல்கம்பு நட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

Update: 2017-06-11 22:30 GMT
டி.என்.பாளையம்,

டி.என்.பாளையம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் தொட்டகோம்பை மலைக்கிராமம் உள்ளது. இந்த மலைக்கிராமத்தையொட்டி உள்ள புளியமரம், ஆலமரத்தின் கீழ் பழமையான ஆலமரத்து மேப்பராயன் சாமி கோவில் உள்ளது.

இக்கோவிலில் வெள்ளி மற்றும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது. பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள், கை, கால் செயல் இழந்தவர்கள், பேச்சு திறன் குறைவானவர்கள் ஆலமரத்து மேப்பராயன்சாமி கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடனாக விலங்குபூட்டு, கைத்தடி, வேல்கம்பு, கிளி உருவ கம்பு ஆகியவற்றை நட்டு வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினால் நோய் குணமாகும் என்பது பக்தர்களின் ஐதீகம்.

அதன்படி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோவிலுக்கு நேற்று முன்தினம் மதியம் வந்து வேல் கம்பு நட்டு வைத்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தி சாமியை வழிபட்டனர். இதில் கள்ளிப்பட்டி, பங்களாபுதூர், துறையம்பாளையம், கொண்டையம்பாளையம், அத்தாணி, கோபி உள்ளிட்ட ஊர்களில் இருந்து 100–க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இறுதியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அடர்ந்த வனப்பகுதி என்பதால் அந்தியூர் வனத்துறையினர் தீவிர சோதனைக்கு பின்னரே பக்தர்களை அனுமதித்தார்கள்.

மேலும் செய்திகள்